குரங்கு அம்மை நோய் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு

குரங்கு அம்மையை கட்டுப்படுத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. தொற்று பாதித்தவருடன் தொடர்பில் இருந்தவர்களை 21 நாட்கள் கண்காணிக்குமாறு கூறியுள்ளது.

உலகம் முழுவதும் 24 நாடுகளில் சுமார் 400 பேருக்கு குரங்கு அம்மை பாதித்து இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இதை இப்போதே பெருந்தொற்றாக அறிவிக்க முடியாது என்றபோதிலும், இந்நோய் அதிகமாக பரவக்கூடியது என்று தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை குரங்கு அம்மை நுழையவில்லை. இருப்பினும், பல நாடுகளில் பரவி இருப்பதால், அதை தடுப்பதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

குரங்கு அம்மை பாதித்தவர்களையும், மொத்தமாக பாதித்த இடங்களையும் விரைவாக அடையாளம் காண வேண்டும். மேற்கொண்டு பரவுவதை தடுக்க சம்பந்தப்பட்டவர்களை தனிமைப்படுத்த வேண்டும். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து கண்காணிக்க வேண்டும்.

குரங்கு அம்மை என சந்தேகத்துக்குரிய மாதிரிகளை புனேவில் உள்ள தேசிய வைரஸ் ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி, உறுதி செய்ய வேண்டும். குரங்கு அம்மை பாதித்தவரின் தொடர்பில் இருந்தவர்களை தொற்று அறிகுறி ஏற்பட்டதில் இருந்து 21 நாட்களுக்கு நாள்தோறும் கண்காணிக்க வேண்டும்.

நோயாளிகளுக்கும், வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கும் சிகிச்சை அளிக்கும் சுகாதார பணியாளர்கள் நன்றாக கை சுத்தத்தை பராமரிக்க வேண்டும். முழு கவச உடை அணிய வேண்டும். அதுபோல், குரங்கு அம்மை பாதித்த நாடுகளுக்கு சென்று வந்து அறிகுறிகளுடன் காணப்படும் நோயாளிகளை எல்லா ஆஸ்பத்திரிகளும் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools