காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவரும், முன்னாள் மந்திரியுமான டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவி எனக்கு வேண்டாம். தற்போது தலைவராக உள்ளவருக்கு நான் ஒத்துழைப்பு வழங்குவேன். நான் எம்.எல்.ஏ.வாக உள்ளேன். மக்கள் பணியாற்ற எனக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். நான் கட்சியில் மூத்த தலைவர் அல்ல. இளம் தலைவராகவே உள்ளேன். கட்சி நிர்வாகிகளை நியமிக்கும் பணியை மேலிட தலைவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.
வட கர்நாடகம், கடலோர கர்நாடகம் மற்றும் தென் கர்நாடகத்தின் உள் மாவட்டங்களில் மழை வெள்ளம் ஏற்பட்டு பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மக்களுக்கு உதவும் பொருட்டு, முதல்-மந்திரியின் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் நிதி வழங்க முடிவு செய்துள்ளேன். முதல்-மந்திரி எடியூரப்பா டெல்லி சென்றுள்ளார். அங்கிருந்து, எவ்வளவு நன்கொடையை பெற்று வருகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
வீடு கட்ட ரூ.5 லட்சம் கொடுப்பதாக முதல்-மந்திரி அறிவித்துள்ளார். அவர் தனது வாக்குறுதியை காப்பாற்ற வேண்டும். காங்கிரஸ் கட்சியில் அமல்படுத்தப்பட்ட திட்டங்களை ரத்து செய்தால் அதை நாங்கள் சகித்துக்கொள்ள மாட்டோம். நாங்கள் தீவிரமான போராட்டத்தை நடத்துவோம்.
பழிவாங்கும் அரசியலை செய்யமாட்டேன் என்று எடியூரப்பா கூறியிருக்கிறார். அதன்படி அவர் நடந்துகொள்ள வேண்டும். எங்கள் கட்சியின் ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட திட்டங்களால் ஏழை மக்கள் பயன்பெற்று வருகிறார்கள். பழைய திட்டங்களை ரத்து செய்யக் கூடாது.
தொலைபேசி ஒட்டு கேட்கப்பட்டதாக புகார் கூறுகிறார்கள். குமாரசாமி ஆட்சியில் தொலைபேசி ஒட்டு கேட்கப்படவில்லை. ஆனால் ஊடகங்களுக்கு இது எப்படி தெரிந்தது என்று தெரியவில்லை. முதல்-மந்திரி எடியூரப்பா இதுகுறித்து எந்த விசாரணையை வேண்டுமானாலும் நடத்தட்டும். முன்னாள் போலீஸ் மந்திரி எம்.பி.பட்டீல் இந்த விஷயத்தில் அரசியல் செய்கிறார்.
தொலைபேசி ஒட்டு கேட்கப்பட்டிருந்தால், அவரே புகார் கொடுத்திருக்க வேண்டும். எங்கள் வீடுகளில் சோதனைகள் நடைபெற்றது. அப்போது ஒன்றும் செய்யாமல் அமைதியாக வந்தார்களா?. பா.ஜனதாவினர் என்னென்ன செய்தனர் என்பது எங்களுக்கு தெரியும்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.
தொலைபேசி ஒட்டுகேட்பு புகார் குறித்து விசாரணை நடைபெற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் பெரும்பாலான தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். ஆனால் அதே கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்களில் ஒருவரான டி.கே.சிவக்குமார், குமாரசாமி ஆட்சியில் தொலைபேசி ஒட்டு கேட்கப்படவில்லை என்று கூறியிருக்கிறார். இதன் மூலம் குமாரசாமிக்கு அவர் தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். இது காங்கிரசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.