Tamilசெய்திகள்

குமரி மாவட்டத்தில் நடந்த பறவைகள் கணக்கெடுப்பில் 191 பறவை இனங்கள் கண்டறியப்பட்டது

குமரி மாவட்டத்தில் கடந்த 2 மற்றும் 3-ந் தேதிகளில் ஒருங்கிணைந்த நிலப்பறவை கணக்கெடுப்பு நடைபெற்றது. இந்த பறவைகள் கணக்கெடுப்பானது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள், நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகள் என மொத்தம் 25 பகுதிகளில் நடத்தப்பட்டது. கணக்கெடுப்பில் வனத்துறையைச் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து பல தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

பறவைகள் கணக்கெடுப்பில் மொத்தம் 191 பறவை இனங்கள் கண்டறியப்பட்டன. முந்தைய ஆண்டான 2023-ம் ஆண்டு பறவைகள் கணக்கெடுப்பினை ஒப்பிடுகையில் இந்த வருடம் கூடுதலாக 18 இன வகை பறவைகள் அதிகமாக கண்டறியப்பட்டன. அதாவது இந்த கணக்கெடுப்பில் குமரி வனக்கோட்டத்தில் மொத்தம் 6,055 பறவைகள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்த பறவைகள் கணக்கெடுப்பில் அரிய வகை பறவைகளான நீல தலை பூங்குருவி, வடக்கு சிட்டு பருந்து, கதிர்குருவி, பிளைட் நெட்டைக்காலி, பெரிய அலகு கதிர் குருவி ஆகிய வலசை பறவைகள், புதியதாக கண்டறியப்பட்டுள்ளன. மேலும் இங்கு கூடுதலாக வசித்து வருகிற பறவைகளில் நீண்ட அலகு நெட்டைக்காலி, சிறிய வல்லூறு, கேரள கொண்டைக்கழுகு, கருஞ்சிவப்பு வயிற்று கழுகு, மலை இருவாச்சி, பொன்முதுகு மரங்கொத்தி, மஞ்சள் கண் சிலம்பன், பருத்த அலகு கதிர்குருவி ஆகிய பறவைகளும் புதியதாக கண்டறியப்பட்டுள்ளன. இத்தகவலை மாவட்ட வன அதிகாரி பிரசாந்த் தெரிவித்துள்ளார்.