குமரி மாவட்டத்தில் இதுவரை 130 கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்கு முடக்கம்

குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் ரெயில்கள் மூலமாக தற்பொழுது கஞ்சா வெளி மாநிலங்களில் இருந்து குமரி மாவட்டத்திற்கு கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதையடுத்து ரெயில்வே போலீசாரும் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த வாரம் ரெயிலில் அனாதையாக கிடந்த 6 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மாவட்டம் முழுவதும் கஞ்சா, குட்கா விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் மார்த்தாண்டம் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையிலான போலீசார் கண்ணாங்கோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தார்.போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்த போது அதே பகுதியை சேர்ந்த ஷாபான் அதீல் (வயது 23) என்பது தெரிய வந்தது. அவரது மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது அதில் பிளாஸ்டிக் கவரில் 2 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் ஷாபான் அதீலை கைது செய்தனர். மேலும் அவரது வங்கி கணக்கை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் இதுவரை 130 கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளது. 10-க்கும் மேற்பட்ட கஞ்சா வியாபாரிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools