குமரியில் மழையால் பாதிப்படைந்த பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாகவே மழை பெய்துவந்தது. 12-ந் தேதி முதல் மிக கனத்த மழை கொட்டியது. அன்று முதல் தொடர்ந்து பெய்த மழையால் நேற்று முன் தினம் மாவட்டமே வெள்ளக்காடானது.
200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டது. சுமார் 50 ஆயிரம் வீடுகளில் மழை நீர் புகுந்தது.
மேலும் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் கால்வாய் எது? சாலை எது? என்று தெரியாத அளவுக்கு வெள்ளம் ஓடியது. குழித்துறை, தோவாளை, தேரேகால்புதூர், தக்கலை, குமாரபுரம், நித்திரவிளை, கோதையாறு, குற்றியாறு, மோதிரமலை பகுதிகளில் பெரும்பாலான சாலைகள் சேதம் அடைந்தது.
இதுபோல பல பாசன குளங்கள் உடைப்பெடுத்தன. அந்த தண்ணீரும் அருகில் உள்ள விளைநிலங்களில் புகுந்து பயிர் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளத்தில் தத்தளிப்பதை அறிந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அங்கு மீட்பு பணிகளை விரைவுபடுத்த உத்தரவிட்டார். மேலும் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், பெரிய கருப்பன் ஆகியோரை குமரி மாவட்டத்திற்கு அனுப்பி வைத்தார்.
அவர்கள் இருவரும் அமைச்சர் மனோ தங்கராஜூடன் இணைந்து வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டனர். மேலும் நிவாரண பணிகளை முடுக்கிவிட்டனர்.
குமரி மாவட்டத்தில் மழை வெள்ளம் வடியாத நிலையில் இன்றும் 4-வது நாளாக மழை பெய்தது. மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை கொட்டியது.
மேற்கு மாவட்ட பகுதிகளிலும், மலையோர கிராமங்களிலும் மழை பெய்தபடி இருந்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. அணைகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக நிவாரண பணிகள் பாதிக்கப்பட்டன.
இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் கன்னியாகுமரி மாவட்ட நிலவரம் குறித்து அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து இன்று நேரில் ஆய்வு செய்ய கன்னியாகுமரி மாவட்டம் வந்தார்.
இதற்காக சென்னையில் இருந்து இன்று காலை விமானம் மூலம் 10 மணிக்கு மதுரை வந்தார். அங்கிருந்து கார் மூலம் நாகர்கோவில் தோவாளை பகுதிக்கு வந்தார். அங்கு மழையால் சேதமடைந்த பெரியகுளம் கால்வாய் புனரமைப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தோவாளையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மண்டபத்தில் மழை பாதிப்புக்கு ஆளான மக்கள் தங்கி இருந்தனர். அவர்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.
பின்னர் அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
இதை தொடர்ந்து திருப்பதிசாரம், தேரேகால் புதூர் கால்வாய் கரை உடைப்பையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் இப்பகுதியில் மழையால் சாலையும் சேதமாகி இருந்தது. அதனை சீரமைக்கும் பணி குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து அப்பகுதியில் மேற்கொள்ளப்படும் நிவாரண பணிகளையும் பார்வையிட்டார்.
தோவாளை பகுதியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிற்பகல் குமாரகோவில் சென்றார். அங்கு பி.பி.கால்வாய் கரை உடைப்பை பார்வையிட்டார். அதன் சீரமைப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
மேலும் மாவட்டம் முழுவதும் மழையால் ஏற்பட்ட பாதிப்புகள், அதனை சீர் செய்ய மேற்கொண்ட நடவடிக்கைகள், சீரமைப்பு பணிகளை விரைந்து முடிப்பது குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், கே.என்.நேரு, பெரிய கருப்பன், மனோ தங்கராஜ் மற்றும் மூத்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.
கன்னியாகுமரி மாவட்ட மழை சேதங்களை பார்வையிட்ட பின்னர் அவர் இங்கிருந்து நெல்லைக்கு புறப்பட்டு செல்கிறார்.