X

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து சதியா? – விசாரணை தீவிரம்

குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதையில் விமானம் விழுந்து நொறுங்கி தீ பிடித்து எரிந்ததில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுல்லிக்கா ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் ஹெலிகாப்டர் எப்படி விபத்தில் சிக்கியது என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

கோவையை அடுத்த சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து காலை 11.30 மணிக்கு முப்படைத் தளபதி உள்பட 14 பேர் பயணித்த எம்.ஐ.17 வி5 ரக ஹெலிகாப்டர் புறப்பட்டது. இதனை குன்னூர் ராணுவ பயிற்சி மைதானத்தில் இருக்கும் சிப்கானா கிளப்பில் தரையிறக்க முடிவு செய்யப்பட்டு, அதற்காக தீயணைப்பு வாகனமும் தயார் நிலையில் இருந்தது.

மேட்டுப்பாளையம் அருகே சென்றபோது வானில் கடுமையான மேகமூட்டம் அதிகமாக இருந்து உள்ளது. பனி மூட்டத்திலும் செல்லக்கூடிய வசதி இருப்பதால் ஹெலிகாப்டர் தொடர்ந்து பயணித்தது. ஆனால் மேட்டுப்பாளையத்தை கடந்தபோதே ஹெலிகாப்டர் தள்ளாடியபடியே சென்று உள்ளது.

குன்னூர் காட்டேரி பூங்கா அருகே உள்ள இப்சேட் எஸ்டேட் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் சென்ற போதும் பனிமூட்டமாகவே காணப்பட்டது. அப்போது திடீரென்று அங்கு இருந்த 40 அடி உயரம் கொண்ட மரத்தில் விமானத்தின் ஒரு இறக்கை மோதியது. இதேபோல் ஹெலிகாப்டரின் வால்பகுதியும் மற்றொரு மரத்தில் மோதியது.

தொடர்ந்து மற்றொரு மரத்தில் மோதிய ஹெலிகாப்டர் கீழே விழுந்து தீப்பிடித்தது. இதை நேரில் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் விரைந்து சென்று மீட்க ஓடி வந்துள்ளனர். ஆனால் ஹெலிகாப்டர் டமார், டமார் என சத்தம் வந்ததால் வெடி பொருட்கள் இருக்கலாம் என்ற அச்சத்தில் அதன் அருகே செல்ல பயந்து உடனடியாக தீயணைப்புதுறை மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களின் உடல்களை மீட்டனர்.

முப்படை தளபதி சென்ற விமானம் விபத்துக்குள்ளானது குறித்து விமானப்படை விசாரணை நடத்த உத்தரவிட்டிருந்தது. உடனடியாக விமானப்படை அதிகாரிகளும் சம்பவம் நடந்த காட்டேரி பகுதிக்கு விரைந்தனர். விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டனர். விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரின் உதிரி பாகங்கள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டனர். தொடர்ந்து ஹெலிகாப்டர் விபத்து எப்படி ஏற்பட்டது? பனி மூட்டத்தால் விபத்து ஏற்பட்டதா? அல்லது ஹெலிகாப்டரில் ஏதாவது கோளாறு இருந்ததா? என பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

மேலும் விபத்தை நேரில் பார்த்த அப்பகுதியை சேர்ந்த கிராம மக்களிடமும் உள்ளூர் போலீசார் உதவியுடன் விமானப்படையினர் விசாரித்தனர்.

விபத்துக்குள்ளான எம்.ஐ.17 வி5 ரக ஹெலிகாப்டர் முக்கிய வி.வி.ஐ.பிக்கள் மட்டுமே பயன்படுத்தக்கூடிய ஒரு ஹெலிகாப்டர் ஆகும். ஏனென்றால் இந்த ஹெலிகாப்டர் மிகவும் பாதுகாப்பானது என்பதால் முக்கிய வி.வி.ஐ.பி.க்கள் தாங்கள் செல்வதற்கு இதனையே பயன்படுத்தி வந்துள்ளனர்.

பொதுவாகவே இந்த ஹெலிகாப்டர் புறப்படுவதற்கு முன்பு கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படும். அந்த வகையில் முப்படை தலைமை தளபதி புறப்பட்ட இந்த எம்.ஐ.17 வி.5 ரக ஹெலிகாப்டரும் பரிசோதிக்கப்பட்டது.

அதன்பின்னரே முப்படை தளபதி உள்பட 14 பேர் டெல்லியில் இருந்து ஹெலிகாப்டரில் பயணித்துள்ளனர். பலமுறை பரிசோதிக்கப்பட்டும் இந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியுள்ளது.

பொதுவாகவே ராணுவ உயர் அதிகாரிகள் பயணிக்கும் போதும், அவர்கள் செல்லக்கூடிய விமானம், ஹெலிகாப்டர் அதிகபட்ச பாதுகாப்பு கொண்டதாக இருக்கும். விபத்தில் சிக்கிய இந்த எம்.ஐ.17 வி5 ரக ஹெலிகாப்டர் இதற்கு முன் இப்படி எல்லாம் விபத்துக்குள்ளானது கிடையாது.

அதி நவீன தொழில் நுட்பங்களை கொண்ட இந்த ஹெலிகாப்டரில் பாதுகாப்பு அம்சத்தில் குறைபாடு ஏற்படுவது என்பது மிகவும் குறைவு என சொல்லப்படுகிறது. மேலும் பனி மூட்டத்திலும் எளிதாக கடந்து செல்லக்கூடிய ஹெலிகாப்டர் என்பதால் இந்த விபத்து தற்செயலாக நடந்ததா? அல்லது ஏதாவது சதியா? என்பது தெரியவில்லை.

உயிரிழந்த முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் நாட்டின் பாதுகாப்புக்காக சில வேலைகளை கையில் எடுத்திருந்ததாகவும், அதனால் இது வெளிநாட்டு அமைப்புகளின் சதி திட்டமாக இருக்குமோ? என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. அந்த கோணத்திலும் ராணுவ அதிகாரிகளின் விசாரணை நடந்து வருகிறது.

இதற்கிடையே ஹெலிகாப்டரில் என்ன நடந்தது என தெரிய வேண்டும் என்றால் அதில் இருந்த கருப்பு பெட்டி கிடைத்தால் மட்டுமே தெரியவரும். அதனால் அந்த கருப்பு பெட்டியை தேடும் பணியில் ராணுவ வீரர்கள், விமானப்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.