Tamilவிளையாட்டு

குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் ஓய்வு அறிவித்தார்

இந்தியாவின் சாதனை வீராங்கனையாக திகழ்பவர் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம். இவர் ஆறு முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனைப் படைத்தவர். மேலும், 2012 ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை தேடிக்கொடுத்தவர். சாதனை வீராங்கனையான இவர் குத்துச்சண்டை போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.

40 வயது வரைதான் ஆண்கள் மற்றும் பெண்கள் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க முடியும் என சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் விதி சொல்கிறது. ஆனால், 40 வயதை கடந்த பின்னரும் பதக்கம் வெல்லும் வேட்கையில் மேரி கோம் உள்ளார். இருந்த போதிலும் வயது காரணமாக ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

இதுகுறித்து மேரி கோம் கூறுகையில் “இன்னும் பல போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்ற வேட்கை உள்ளது. ஆனால் வயது வரம்பு முடிவடைந்ததால் என்னால் எந்தவிதமான போட்டியிலும் கலந்து கொள்ள முடியாது. நான் இன்னும் அதிக போட்டிகளில் விளையாட விரும்புகிறேன். இருந்த போதிலும் வயது வரம்பு காரணமாக கட்டாய ஓய்வை அறிவிக்கிறேன். என்னுடைய வாழ்க்கையில் எல்லாவற்றையும் சாதித்துவிட்டேன்” என்றார்.