குட்கா வழக்கு – முன்னாள் அமைச்சர்கள், காவல்துறை அதிகாரிகள் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

இதில் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி செந்தில் முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேருக்கு எதிராக சென்னை சி.பி.ஐ. கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கின் கூடுதல் குற்றப் பத்திரிகையை சி.பி.ஐ. அதிகாரிகள் தாக்கல் செய்தனர். அதில், மத்திய, மாநில அதிகாரிகள் ஆர்.சேஷாத்ரி, குல்சார் பேகம், அனீஷ் உபாத்யாய், வி.இராமநாதன், ஜோஸ் தாமஸ், பி.செந்தில்வேலவன் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா என்ற பி.வெங்கடரமணா, வி.எஸ்.கிருஞ்சிச்செல்வன், எஸ்.கணேசன், முன்னாள் அமைச்சர் டாக்டர். சி, விஜயபாஸ்கர், அ.சரவணன், டாக்டர். லக்ஷ்மி நாராயணன், பி.முருகன் முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், வி.கார்த்திகேயன், ஆர்.மன்னர்மன்னன், வி.சம்பத், ஏ.மனோகர், அ.பழனி கே.ஆர்.ராஜேந்திரன் ஆகிய 21 பேர் மீது கூடுதல் குற்றபத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கில் முன்னாள் மற்றும் இன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளதால் சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றி சி.பி.ஐ. கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த வழக்கு சி.சஞ்சய் பாபா முன்பு இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட மாதவராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத் துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 5 பேர் ஆஜராகி இருந்தனர்.

இதனையடுத்து நீதிபதி வழக்கில் கூடுதல் குற்றப் பத்திரிகை தற்பொழுது தாக்கல் செய்யப்பட்டு புதிதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதால் அனைவருக்கும் சம்மன் அனுப்புவதாகவும் அவர்கள் அனைவரும் செப்டம்பர் மாதம் 9-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

வெளி ஊர்கள் மற்றும் வெளி மாநிலங்களில் உள்ளவர்களுக்கு சம்மன்களை சி.பி.ஐ. காவல்துறை வழங்கவும் உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 9-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools