X

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஓவியம் வரைந்த மம்தா பானர்ஜி!

மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இவற்றுக்கு எதிராக 11 பேரணிகளையும், 7 பொதுக்கூட்டங்களையும் நடத்தி உள்ளார். இவற்றை மேற்கு வங்காளத்தில் அமல்படுத்த மாட்டேன் என்று உறுதிபட தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குடியுரிமை சட்டத்துக்கு ஓவியம் மூலம் எதிர்ப்பு தெரிவிக்கும் நிகழ்ச்சி, நேற்று கொல்கத்தாவில் மாயோ சாலையில் உள்ள மகாத்மா காந்தி சிலை அருகே நடந்தது. அதில், மம்தா பானர்ஜி கலந்து கொண்டார்.

மம்தா பானர்ஜி, நன்றாக ஓவியம் வரைபவர். எனவே, அவர் தூரிகையை கையில் ஏந்தி, குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடும் ஒரு பெண்ணின் முகத்தை வரைந்தார். முகத்தில் ஆங்காங்கே, ‘குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு’ ஆகியவற்றை குறிக்கும் ஆங்கில எழுத்துகளை எழுதினார்.

மேலும், அந்த பெண்ணின் கண்ணின் கருவிழி இருக்கும் இடத்தில் ‘நோ’ என்ற ஆங்கில எழுத்துகளை எழுதி இருந்தார். அதுபோல், வேறு சில ஓவியர்களும் தங்களது எதிர்ப்பு ஓவியங்களை வரைந்தனர்.

மம்தா பானர்ஜி வரைந்த ஓவியம், நாடு முழுவதும் ஓவிய கூடங்களில் காட்சிக்கு வைக்கப்படும் என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறினார்.

ஓவியம் வரைந்த பிறகு, மம்தா பானர்ஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

கலைஞர்கள் பல்வேறு கலை வடிவங்கள் மூலம் குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் தெரிவிக்கும் ஒரே செய்தி, ‘‘இந்தியர்களாகிய நாங்கள், வண்ணமயமான கலாசாரமும், வேற்றுமையில் ஒற்றுமையும் கொண்டவர்கள். அதை பாதுகாப்போம். நாங்கள் பிளவை விரும்பவில்லை. ஒன்றுபட்ட இந்தியாவையே விரும்புகிறோம்’’ என்பதுதான்.

இது, தனித்துவமான போராட்ட அடையாளம். இந்த அமைதியான போராட்டம், ஒட்டுமொத்த நாட்டுக்கும் முன்னுதாரணமாக இருக்கும்.

இந்த சட்டத்தை கொண்டு வருவதற்கு முன்பு, மத்திய அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி கருத்து கேட்டிருக்க வேண்டும். ஆனால் நடத்தவில்லை.

இருப்பினும், பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம். ஆனால், முதலில் இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். இதை அமல்படுத்த மாட்டோம் என்று மீண்டும் கூறிக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.