குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாளை ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி போரட்டம்
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
குடியுரிமை சட்டத்தை தங்கள் மாநிலங்களில் அமல்படுத்த மாட்டோம் என்று கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களின் முதல்-மந்திரிகள் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை (திங்கட்கிழமை) டெல்லியில் சத்தியாகிரகப் போராட்டம் நடத்தப்படுகிறது.
மகாத்மா காந்தி நினைவிடம் அமைந்துள்ள டெல்லி ராஜ்கோட்டில் நாளை மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த போராட்டம் நடைபெறுகிறது.
இந்த போராட்டத்தில் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் கூட்டாக பங்கேற்க உள்ளனர். இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.வி. வேணுகோபால் டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசமைப்புச் சட்டத்தின் புனிதத்தையும், மக்களின் உரிமைகளையும் பாதுகாக்க சத்தியாகிரகப் போராட்டம் நடத்தலாம் என கட்சித் தலைவர் சோனியா காந்தி தலைமையில் அவரது இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி நாளை (திங்கட்கிழமை) மதியம் 2 மணி முதல் இரவு 8 மணிவரை நடைபெறும் இப்போராட்டத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கட்சியின் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
ராகுல்காந்தி கடந்த வாரம் வெளிநாடு சென்று திரும்பியுள்ள நிலையில் முதல் முறையாக அவரும் போராட்டத்துக்கு வர உள்ளார்.
பிரியங்கா காந்தி ஏற்கனவே டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக இரண்டு முறை போராட்டம் நடத்தி உள்ளார். நாளை ராகுல்காந்தியும், பிரியங்காகாந்தியும் இணைந்து போராட்டம் நடத்துவதால் டெல்லியில் கூடுதல் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.