குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு
மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து திமுக, மக்கள் நீதி மய்யம், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் 59 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. குடியுரிமை திருத்த சட்டம், சட்டவிரோதம் என அறிவிக்க கோரி இந்த வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்த வழக்குகள் அனைத்தும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூர்ய காந்த் ஆகியோர் கொண்ட அமர்வில் இன்று ஒன்றாக இணைத்து விசாரிக்கப்பட்டன.
அப்போது, மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இடைக்கால தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். அதேசமயம், இந்த சட்டம் தொடர்பாக, மத்திய அரசு ஜனவரி 22ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டனர். வழக்கின் விசாரணையையும் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.