குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டம் – நடிகர் சித்தார்த் உள்ளிட்ட 800 பேர் மீது வழக்கு பதிவு
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தமிழகத்தில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நேற்று அனுமதியின்றி போராட்டம் நடைபெற்றது.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் ஒன்றுகூடி நடத்திய போராட்டம் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது. அதனை போன்றே குடியுரிமை சட்டத்துக்கு எதிராகவும் வள்ளுவர் கோட்டத்தில் இளைஞர்கள் திரளாக திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளம்பெண்களும், இளைஞர்களும் கைகளில் பதாகைகளை ஏந்தி வந்திருந்தனர். அதே போன்று குடியுரிமை சட்டத்துக்கு எதிரான அச்சிட்ட வாசகங்களை இளம்பெண்கள் பலர் கைகளில் ஏந்தி இருந்தனர்.
மாணவர்கள் பெருமளவில் பங்கேற்ற இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நடிகர் சித்தார்த், தெகலான்பாகவி, (எஸ்.டி.பி.ஐ.) வசீகரன், (ஆம் ஆத்மி) உள்பட பலர் கலந்துகொண்டனர். மொத்தம் 54 அமைப்புகளை சேர்ந்தவர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.
இவர்கள் மீது சட்ட விரோதமாக கூடியது உள்ளிட்ட2 சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 800 பேர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.