Tamilசெய்திகள்

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்த மக்கள் நீதி மய்யம் கட்சி!

பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி வரை இந்தியாவுக்கு வந்து குடியேறிய முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதா எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கு இடையே பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் நிறைவேறியது.

இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு கடந்த 12-ந்தேதி இரவு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.

இந்த நிலையில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மகுவா மொய்த்ரா ஆகியோர் சார்பிலும் மற்றும் அகில அசாம் மாணவர்கள் சங்கம், ரிகாய் மஞ்ச் உள்ளிட்ட சில அமைப்புகள் சார்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 13-ந்தேதி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

மகுவா மொய்த்ரா சார்பில் அவரது வக்கீல் சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு முன்பு ஆஜராகி, மொய்த்ராவின் மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் அல்லது இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று முறையிட்டார்.

அதற்கு தலைமை நீதிபதி, இது தொடர்பாக வழக்குகளை பட்டியலிடும் அதிகாரியை அணுகுமாறு கேட்டுக்கொண்டார்.

குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருக்கிறது. இதுவரை 14 வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்று காலை கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த கட்சி சார்பாக வழக்கறிஞர் ஹரிஷ் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு ஏற்றுக்கொள்ளப்படுமா? என்பது நண்பகலில் தெரியவரும். அனைத்து வழக்குகளும் ஒருசேர வரும் புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிகிறது.

பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் சில நாட்களிலேயே விவாதித்து நிறைவேற்றப்பட்டு உடனுக்குடன் குடியரசுத் தலைவரால் ஒப்புதலும் வழங்கப்பட்ட குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்கள் பற்றி எரிகின்றன. பிற மாநிலங்களிலும் இதற்கு கடும் எதிர்ப்பு நிலவுகிறது.

இந்த மசோதா மீதான விவாதத்தின்போது, மக்களை மதத்தின் அடிப்படையில் பிளவுபடுத்துவது இந்தியாவின் கருத்துக்கு முரணானது என எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை வைத்தன.

அசாம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் இந்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் இயல்பு நிலை பாதிக்கப்படும் வகையில், இணைய சேவை துண்டிக்கப்பட்டு ஆங்காங்கே ஊரடங்கு உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *