மத்தியில் ஆளும் பா.ஜனதா கட்சி, குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் சமீபத்தில் தாக்கல் செய்தது.
குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. எதிர்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி பாராளுமன்றத்தில் இச்சட்டத்தை பா.ஜனதா கட்சி நிறைவேற்றியது.
சட்டம் நிறைவேறியதும், அதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். இதையடுத்து அனைத்து மாநிலங்களுக்கும் இந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று, மத்திய அரசு கூறியது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை கேரளாவில் அமல்படுத்த மாட்டோம், என்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவித்தார்.
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கும் அனைத்து கட்சிகள், அமைப்புகள், பொதுமக்கள் கேரள அரசின் முடிவுக்கு ஆதரவு தர வேண்டும் என்றும் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து திருவனந்தபுரம் பாளையத்தில் உள்ள தியாகிகள் நினைவிடம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சத்தியாகிரக போராட்டம் நடந்தது.
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை கண்டித்து நடந்த இப்போராட்டத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயனும் கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் நாட்டில் மதத்தின் பெயரால் பிளவை ஏற்படுத்த பா.ஜனதா முயற்சி செய்கிறது.
ஆர்.எஸ்.எஸ்.சின் கொள்கைகளை அமல்படுத்தவே பா.ஜனதா தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாட்டின் இறையாண்மை மீது நம்பிக்கை கொண்டவர்கள் இதனை ஏற்க மாட்டார்கள்.
நாட்டில் நிலையற்ற தன்மையை உருவாக்க முயற்சிக்கும் பா.ஜனதாவின் நடவடிக்கைகளை எதிர்க்க வேண்டும். இதற்காகவே இந்த போராட்டம் நடக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக செயல்படும் காங்கிரஸ் கட்சி, திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கம்யூனிஸ்டுகள் நடத்திய போராட்டத்தில் இன்று கைகோர்த்தது.
சட்டசபையில் எலியும், பூனையுமாக மோதிக்கொள்ளும் காங்கிரஸ், கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா, முதல்-மந்திரி பினராயி விஜயனுடன் போராட்டக்களத்தில் பங்கேற்றார். ஏராளமான காங்கிரஸ் தொண்டர்களும் இதில் கலந்து கொண்டனர்.