குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக அசாமில் தொடரும் போராட்டம்!
மத்திய அரசு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றி உள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ஆங்காங்கே வன்முறை சம்பவங்களும் அரங்கேறி உள்ளன. இதனால் பதற்றமான சூழல் நிலவுகிறது.
அசாம் மாநிலத்தில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால், திப்ருகர் உள்ளிட்ட இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
எந்த அமைப்போ, அரசியல் கட்சியோ போராட்டம் அல்லது முழு அடைப்போ அறிவிக்கவில்லை என்றாலும், ஆங்காங்கே தன்னிச்சையான போராட்டங்கள் வெடித்தன. நெடுஞ்சாலைகளில் மரக்கட்டைகளையும், பழைய டயர்களையும் போட்டு எரித்தனர். பல நகரங்களில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன.
அசாம் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை பராமரிக்க ராணுவத்தினரும் உதவ வேண்டும் என்று மாநில நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. ராணுவ கமாண்டர்களும் நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தேவைப்பட்டால் ஒரு அணியை சேர்ந்த ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, நேற்று இரவு நடைபெற்ற போராட்டத்தின் போது, திப்ருகர் லக்கிநகர் பகுதியில் உள்ள அசாம் முதல்வர் இல்லத்தின் மீது போராட்டக்காரர்கள் கல் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. கல்வீச்சில், சில ஜன்னல் கண்ணாடிகள் உடைந்ததாக போலீசார் தெரிவித்தனர். அதேபோல், பாஜக எம்.எல்.ஏ பிரசந்தா புகான் மற்றும் கட்சியின் தலைவர் சுபாஷ் தத்தா ஆகியோரின் இல்லத்தையும் போராட்டக்காரர்கள் சேதப்படுத்தினர்.
இதனால் திப்ருகர் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போராட்டங்களின் மையப்பகுதியான கவுகாத்தியிலும் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும்வரை இந்த தடை உத்தரவு நீடிக்கும்.
திரிபுரா மாநித்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பெண்கள் சாலையில் அமர்ந்து, எதிர்ப்பு பதாகைகளை முழக்கங்கள் எழுப்பினர்.