குடியரசுத் தலைவர் தேர்தல் – வாக்குப் பெட்டி சென்னை வந்தது
குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான பொருட்களை பாதுகாப்பாக குறிப்பிட்ட நேரத்தில் அனுப்பி வைப்பதற்கான பயிற்சி டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் 2 நாட்கள் நடந்தது. இதில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்காக புதிதாக நியமிக்கப்பட்ட தேர்தல் அதிகாரிகள், உதவி தேர்தல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
உதவி தேர்தல் அதிகாரிகளிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார், தேர்தல் முழுமையாக நிறைவு பெறும் வரை, தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும் என்றார். வாக்குப் பெட்டிகள், வாக்கு சீட்டுகள் ஆகியவற்றை கொண்டு வருதல், பாதுகாத்தல் உள்ளிட்ட பணிகளில் அதிகாரிகள் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டுமென தெரிவித்தார்.
இதையடுத்து குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள், வாக்குச் சீட்டுகள், சிறப்பு பேனா மற்றும் சீலிடப்பட்ட தேர்தல் பொருட்கள் டெல்லி, புதுச்சேரி உள்பட அனைத்து மாநில சட்டசபை செயலகங்களுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டன. வாக்குப் பெட்டிக்கு விமானத்தில் தனி டிக்கெட் மூலம் ஒரு சீட் ஒதுக்கப்பட்டது. வாக்குப் பெட்டிகள் அனைத்து மாநில தலைநகரை அடைந்த பிறகு கிருமி நீக்கம் செய்யப்பட்ட அறையில் வைக்கப்பட்டு அறை பூட்டி சீலிடப்பட்டு வீடியோ கேமரா மூலம் கண்காணிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் டெல்லியில் இருந்து தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட வாக்குப் பெட்டிகள், வாக்கு சீட்டுகள் உள்ளிட்ட பொருட்கள் சென்னை வந்தன. தமிழகத்திற்கு உரிய வாக்குப் பெட்டியை சென்னை விமான நிலையத்தில் உதவி தேர்தல் அலுவலர்கள் சீனிவாசன் மற்றும் சாந்தி ஆகியோரிடம், மாநில துணை தலைமை தேர்தல் அலுவலர் ஸ்ரீதர் சட்டமன்ற பேரவை துணை செயலாளர் ரமேஷ் ஆகியோர் ஒப்படைத்தனர்.