குஜராத் மருத்துவத்துறையில் சாதனை நிகழ்த்தியுள்ளது – குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு
குஜராத் மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்ட குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, சுகாதாரம், நீர்ப்பாசனம், தண்ணீர் விநியோகம் மற்றும் துறைமுக வளர்ச்சி தொடர்பான பல்வேறு திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டினார்.
மேலும் கண்ட்லாவில் உள்ள தீனதயாள் துறைமுக மேம்பாட்டுப் பணியை, அவர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், வளர்ச்சிப் பணிகளில் குஜராத், முன்னணி மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது என்றார். வேளாண் வளர்ச்சிக்காக குஜராத் மாநிலத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும் நடைமுறைகள் தற்போது நாடு முழுவதும் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
சுகாதாரத்துறையில் குஜராத் மாநிலம் மிகப் பெரிய சாதனைப் படைத்துள்ளதாகவும், கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகாதார அட்டை வழங்கிய முதல் மாநிலம் குஜராத் என்றும் அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திற்கு சென்ற குடியரசுத் தலைவர், மகாத்மா காந்தி உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். பின்னர் அங்குள்ள ராட்டையில் அவர் நூல் நூற்று மகிழ்ந்தார்.