குஜராத் பிரசாரத்தில் பிரதமர் மோடி தேர்தல் விதிகளை மீறவில்லை – தேர்தல் ஆணையம்
குஜராத் மாநிலம் படான் நகரில் ஏப்ரல் 21-ம் தேதி நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்ட இந்திய விமானி அபிநந்தனுக்கு ஏதாவது நேரிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பாகிஸ்தானுக்கு எதிராக தாக்குதல் நடத்த 12 ஏவுகணைகளை தயார் நிலையில் வைத்திருந்ததாகவும் குறிப்பிட்டார்.
இதனையடுத்து பிரதமர் மோடி பேசியது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் என காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தனர்.
இந்த புகாரை விசாரித்த தேர்தல் ஆணையம், குஜராத் மாநிலம் படான் நகரில் பிரதமர் மோடி பேசியது தேர்தல் விதிகளை மீறியது அல்ல என கூறியுள்ளது.
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி மீதான 6வது புகாருக்கு தேர்தல் ஆணையம் விசாரித்து விதிமீறல் இல்லை என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.