X

குஜராத் தொங்கு பாலம் விபத்து – பலி எண்ணிக்கை 142 ஆக உயர்வு

சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வட மாநிலங்களில் சாத் பூஜை ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் பூர்வீக விழாவாக நடந்த இந்த சாத் பூஜை சமீப காலமாக வடமாநிலங்கள் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

4 நாட்கள் கடுமையான விரதங்களுடன் புனித நீராடல் உள்ளடக்கியதாக இந்த விழா அமைந்துள்ளது. நீர் நிலைகளை கங்கையாக கருதி மக்கள் அன்றைய தினம் புனித நீராடுவார்கள். வட மாநிலங்களில் நேற்று சாத் பூஜை விழா தொடங்கியது. ஆனால் குஜராத்தில் நடந்த விழா மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி விட்டது. குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்தில் இருந்து சுமார் 300 கி.மீ. தொலைவில் உள்ள மோர்பி நகரில், மசசூ ஆற்றிலும் இந்த விழா நடத்தப்பட்டது.

இந்த ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட மிகப்பழமையான தொங்கு பாலம் உள்ளது. 150 ஆண்டுகள் பழமையான இந்த பாலம் 233 மீட்டர் நீளம் கொண்டதாகும். ஆற்றின் இரு பக்கத்தையும் இணைக்கும் வகையில் கேபிள்கள் மூலம் இந்த தொங்கு பாலம் கட்டப்பட்டு இருந்தது. சுற்றுலா தலமாகவும் இந்த பாலம் திகழ்ந்தது. சமீபத்தில் இந்த பாலத்தில் பழுது ஏற்பட்டதால் அதை சீரமைக்க குஜராத் மாநில அரசு தனியார் நிறுவனத்திடம் பணியை ஒப்படைத்து இருந்தது. அந்த தனியார் நிறுவனம் சமீபத்தில் சீரமைப்பு பணியை முடித்து கடந்த 26-ந்தேதி பாலத்தை திறந்தது.

அன்று முதல் அந்த பாலத்தில் கடந்த 5 நாட்களாக மீண்டும் மக்கள் செல்ல தொடங்கினார்கள். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், தீபாவளிக்கு பிறகு வந்த விடுமுறை தினம் என்பதாலும் சாத் பூஜையின் முதல்நாள் என்பதாலும் மக்கள் ஆயிரக்கணக்கில் அங்கு திரண்டனர். அந்த தொங்கு பாலத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் ஏறி நின்று சாத் பூஜை செய்தனர். சுமார் 500 பேர் ஒரே நேரத்தில் அந்த பாலத்தில் நின்றதால் பாரம் தாங்க முடியாதபடி பாலத்தில் தொய்வு ஏற்பட்டது. அந்த சமயத்தில் சில இளைஞர்கள் தொங்கு பாலத்துக்குள் வேகமாக குதித்ததாகவும், ஓடியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் பொதுமக்களின் எடையை தாங்க முடியாமல் அந்த பாலம் கேபிள்கள் அறுந்து ஆற்றுக்குள் விழுந்தது. தொங்கு பாலத்தில் நின்று கொண்டிருந்த மக்களும் மசசூ ஆற்று தண்ணீருக்குள் விழுந்தனர். ஒருவர் மீது ஒருவர் விழுந்ததால் மக்களால் தண்ணீரில் இருந்து வெளியே வர முடியவில்லை. இந்த விபத்தை கண்டதும் அந்த பகுதியில் இருந்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

போலீசாரும், தீயணைப்பு படையினரும் மீட்பு பணியை தொடங்கினார்கள். இதற்கிடையே தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் விரைந்து வந்து மீட்பு பணியை தொடங்கினார்கள். நேற்று மாலை 6.42 மணிக்கு தொங்கு பாலம் அறுந்து விழுந்த பிறகு 7.30 மணிக்குத்தான் முழுமையான மீட்பு பணிகள் தொடங்கின. நள்ளிரவு வரை சுமார் 60 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். மற்றவர்களை தேடும் பணி விடிய விடிய நடந்தது.

தொங்கு பாலம் அமைந்திருந்த பகுதியில் ஆற்றுக்குள் ஏராளமானவர்கள் பிணமாக மிதந்தனர். விடிய விடிய அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன. உயிருக்கு போராடி கொண்டிருந்தவர்களும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இன்று காலை வரை 180 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்கள் மற்றும் ஆற்றில் மூழ்கி பலியானவர்களின் உடல்கள் பல்வேறு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு உள்ளன.

இன்று காலை வரை நடந்த கணக்கெடுப்பின்படி தொங்கு பாலம் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 142 ஆக அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது. பாலத்தில் இருந்து விழுந்தவர்களில் மேலும் பலரை காணவில்லை. எனவே பலி எண்ணிக்கை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இன்று காலை முதல் 2-வது நாளாக மீட்பு பணி நடந்து வருகிறது. இதற்காக கூடுதலாக 5 கம்பெனி தேசிய பேரிடர் மீட்பு படையினர் குஜராத்துக்கு விரைந்து உள்ளனர். மீட்பு பணியை விரைந்து முடிப்பதற்காக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் டிரோன்கள் மூலம் ஆய்வு செய்து வருகிறார்கள். டிரோன்கள் மூலமாகவும் ஏராளமானோர் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டனர். ராணுவமும் உதவிக்கு அங்கு அழைக்கப்பட்டு உள்ளது. இதனால் மீட்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகின்றன.