குஜராத் சட்டசபை தேர்தல் – முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா ஆகியோரின் சொந்த மாநிலமான குஜராத்தில், 182 இடங்களை கொண்டுள்ள சட்டசபைக்கு டிசம்பர் 1, 5-ம் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது. இந்த தேர்தல் மூலம் கால் நூற்றாண்டாக அங்கு நடக்கிற தனது ஆட்சியைத் தொடர்வதற்கு பா.ஜ.க. வரிந்து கட்டுகிறது. இழந்த ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் முழு முனைப்புடன் களம் இறங்கி இருக்கிறது. இவ்விரு கட்சிகளுக்கும் இடையே டெல்லி மற்றும் பஞ்சாபை ஆளும் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் களம் புகுந்து மும்முனை போட்டி நிலவுகிறது.

அங்கு முதல்கட்டமாக தெற்கு குஜராத், கட்ச்-சவுராஷ்டிரா பகுதிகளில் 19 மாவட்டங்களில் அமைந்துள்ள 89 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் இன்று நடக்கிறது. பா.ஜ.க.வும், காங்கிரசும் 89 தொகுதிகளிலும் தங்கள் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. ஆம் ஆத்மி வேட்பாளர்கள் 88 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது.

இந்த தேர்தலில் மொத்தம் 788 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது. இவர்களில், 339 பேர் சுயேச்சை வேட்பாளர்கள் 70 பேர் பெண் வேட்பாளர்கள் ஆவார்கள். இன்று தேர்தலை சந்திக்கிற முக்கிய வேட்பாளர்கள் பட்டியலில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்-மந்திரி வேட்பாளர் இசுதான் காத்வி (கம்பாலியா), மாநிலத்தலைவர் கோபால் இதாலியா (கட்டர்காம்), கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா (ஜாம்நகர் வடக்கு பா.ஜ.க.) இடம்பெற்றுள்ளனர்.

7 முறை எம்.எல்.ஏ. பதவி வகித்த பழங்குடி இனத்தலைவர் சோட்டு வசவா (ஜாகடியா-பாரதீய பழங்குடி கட்சி), 5 முறை எம்.எல்.ஏ.வாக இருந்த பர்சோத்தம் சோலங்கி (பாவ்நகர் ஊரகம்-பா.ஜ.க.) ஆகியோரும் இன்று தேர்தலை சந்திக்கிறார்கள். இன்று முதல் கட்ட தேர்தல் நடக்கிற தொகுதிகளில் 14 ஆயிரத்து 382 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 3,311 நகர்ப்புறங்களிலும், 11 ஆயிரத்து 71 கிராமப்புறங்களிலும் உள்ளன. 89 மாதிரி வாக்குச்சாவடிகளும், முற்றிலும் பெண் ஊழியர்கள் பணியாற்றும் 611 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த வாக்குச்சாவடிகளில் 2 கோடியே 39 லட்சத்து 76 ஆயிரத்து 670 வாக்காளர்கள் வாக்கு அளிக்க உள்ளனர். இந்நிலையில் குஜராத்தில் இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இடைவெளியின்றி 5 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. 89 தொகுதிகளிலும் தேர்தலை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்துவதற்கு ஏதுவாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools