பாகிஸ்தான் நாட்டில் இருந்து தரைவழி, கடல்வழி, வான்வழியாக இந்திய எல்லைக்குள் போதைப்பொருட்கள் கடத்தப்படும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது.
கடவழியாக போதைப்பொருட்கள் கடத்துவதை தடுப்பதற்காக இந்திய கடற்படை கப்பல்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன. குஜராத் எல்லையில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவல் அடிப்படையில் இந்திய கடற்படை, இந்திய போதைப்பொருள் தடுப்பு அமைப்பு, குஜராத் காவல்துறை ஆகியவை இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சிறிய வகை கப்பல் ஒன்று குஜராத் எல்லையில் செல்வதை கடற்படையினர் கண்டுபிடித்தனர். உடனடியாக அந்த சிறிய வகை கப்பலை சுற்றி வளைத்து சோதனை செய்தனர். அப்போது சுமார் 3,300 கிலோ எடை கொண்ட போதைப்பொருட்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த கப்பலில் இருந்த ஐந்து பேர் இருந்தனர். விசாரணையில் அவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்தது. அவர்களையும் அதிகாரிகள் கைது செய்தனர்.
சமீபத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மிகப்பெரிய அளவிலான சம்பவம் இது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் புனே, டெல்லியில் நடைபெற்ற மிகப்பெரிய சோதனையில் 2500 கோடி ரூபாய் அளவிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஒரு வாரத்திற்குள் தற்போது மிகப்பெரிய அளவில் பொதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
“போதைப்பொருள் இல்லாத நாட்டை உருவாக்குவதில் உறுதிப்பூண்டுள்ள நம்முடைய அரசின் உறுதிப்பாட்டிற்கு இந்த சாதனை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இந்த நேரத்தில் தேசிய போதைப்பொருள் தடுப்பு முகமை, கடற்படை, குஜராத் காவல்துறைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என அமித் ஷா தெரிவித்துள்ளார்.