முதல் இரண்டு இடங்களை பிடித்த குஜராத் டைட்டன்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் சேப்பாக்கத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் குவாலிபையர் 1 ஆட்டத்தில் பலப்பரீட்டை நடத்துகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்பதால் இரண்டு அணி வீரர்களும் முடிந்தவரை தங்களது முழுத்திறமையையும் வெளிப்படுத்துவார்கள்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இது சொந்த மைதானம் என்றாலும் குஜராத் அணியை எளிதில் வீழ்த்தி விட முடியாது. காரணம், குஜராத் அணியின் பந்து வீச்சில் முதுகெலும்பாக முகமது ஷமி இருக்கிறார். சீம்-ஐ பயன்படுத்தி தனது நேர்த்தியான பந்து வீச்சால் பவர்-பிளேயில் அசத்துகிறார். இதனால் லீக் போட்டிகள் முடிவில் 14 ஆட்டங்களில் 24 விக்கெட்டுகள் வீழ்த்தி பர்பிள் தொப்பியை பெற்றுள்ளார்.
சென்னை அணியின் தொடக்க வீரர்களான ருத்துராஜ் கெய்க்வாட், கான்வே ஆகியோர் இவரை சமாளித்து ரன்கள் சேர்த்து விட்டால் சென்னை அணியின் ஸ்கோர் வெகுவாக உயரும் என்பதில் ஐயமில்லை. அதே சமயம், பவர்பிளே ஓவர்களை கடந்த பின் சென்னை அணிக்கு சவால் கொடுக்க ரஷித் கான், நூர் முகமது காத்திருக்கிறார்கள். இவர்கள் இருவரும் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக திகழ்கிறார்கள்.
சேப்பாக்கம் ஆடுகளம் சுழற்பந்து ‘ஸ்லோ’ ஆக இருக்கும் என்பதால் இவர்கள் இருவருடைய பந்து வீச்சில் அதிக ரன்கள் குவிப்பது எளிதானது அல்ல. ரஷித் கானும் 24 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். நூர் முகமது 10 போட்டியில் 13 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.