குஜராத்தில் சிக்கி தவித்த தமிழ் குடும்பத்தை மீட்க உதவிய நடிகர் லாரன்ஸ்!
நடிகர் ராகவா லாரன்ஸ் சந்திரமுகி 2-ம் பாகம் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இந்த படத்துக்கு வாங்கிய சம்பள முன்பணத்தை கொரோனா நிவாரண உதவிகளுக்கு வழங்கி இருக்கிறார். சமீபத்தில் தனது அலுவலகம் முன்னால் திரண்ட வடமாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க அரசு மூலம் ஏற்பாடு செய்தார்.
இந்த நிலையில் குஜராத்தில் சிக்கி தவிக்கும் தமிழ் குடும்பங்கள் ஊர் திரும்ப முடியாமல் தவிப்பதாக அழுது வீடியோ வெளியிட்டு இருந்தனர். அந்த வீடியோவை லாரன்ஸ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு, ‘தமிழ் குடும்பங்களை மீட்க உதவுங்கள்’ என்று குஜராத் முதல்-மந்திரிக்கு வேண்டுகோள் விடுத்தார். லாரன்ஸ் கோரிக்கையை குஜராத் அரசு ஏற்றது.
இதுகுறித்து ராஜ்கோட் கலெக்டர் தமிழ் குடும்பங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து இருப்பதாகவும், அவர்கள் தமிழகம் திரும்ப தேவையான ஏற்பாடுகளை செய்ய அரசு தயாராக இருப்பதாகவும் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இதையடுத்து லாரன்ஸ் குஜராத் முதல்-மந்திரிக்கும், ராஜ்கோட் கலெக்டருக்கும் டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.