குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் புதிய நடுவராக களம் இறங்கும் நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிக பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் 4 சீசன்களும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடுவர் வெங்கடேஷ் பட் ஆகியோர் திடீரென விலகினர். குக் வித் கோமாளி நடுவரான வெங்கடேஷ் பட் விலகியிருந்தாலும், செஃப் தாமு அந்த நிகழ்ச்சியின் நடுவராக தொடர்வார் என சொல்லப்பட்டது.
குக் வித் கோமாளி புதிய சீசனில் வெங்கடேஷ் பட்டுக்கு பதிலாக யார் புதிய நடுவராக வரப்போகிறார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இந்நிலையில், மெஹந்தி சர்க்கஸ் பட நாயகனான மாதம்பட்டி ரங்கராஜ் தான் குக் வித் கோமாளி 5-வது சீசனின் புதிய நடுவராக வர இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
இவர் தொழிலதிபர் மட்டுமின்றி ஒரு பெரிய கேட்டரிங் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். பல பிரபலங்களின் வீட்டு திருமண நிகழ்ச்சிகளுக்கு அவர் தான் கேட்டரிங் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.