குகேஷ் இந்தியாவின் பூகம்பம் – செஸ் ஜாம்பவான் கேரி காஸ்பரோவ் புகழாரம்

கனடாவின் டொரோன்டோ நகரில் நடந்த கேன்டிடேட் செஸ் போட்டியில் 14 சுற்றுகள் முடிவில் இந்திய வீரர் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் 9 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டம் கைப்பற்றி வரலாறு படைத்தார். இதன்மூலம் இந்த ஆண்டின் இறுதியில் நடக்க உள்ள உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரனுடன் மோத உள்ளார்.

ரஷிய செஸ் ஜாம்பவான் கேரி காஸ்பரோவ் தனது 20 வயதில் 1984-ம் ஆண்டில் கேன்டிடேட் செஸ் போட்டியில் பட்டம் வென்றதே முந்தைய இளம் வயது வீரர் ஒருவரின் சாதனையாக இருந்தது. அவரது 40 ஆண்டுகால சாதனையை தற்போது குகேஷ் தகர்த்துள்ளார்.

இந்நிலையில் முன்னாள் உலக சாம்பியனான காஸ்பரோவ் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், குகேசுக்கு வாழ்த்துகள். செஸ் உலகில் புவியின் மேல்தட்டுகளை மாற்றி அமைத்து டொரோன்டோவில் உச்சத்தைத் தொட்டு இருக்கிறார், இந்த இந்தியாவின் பூகம்பம். உயரிய பட்டத்துக்காக அவர் சீன சாம்பியன் டிங் லிரனுடன் விளையாட உள்ளார். இந்தப் போட்டியை நாங்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளோம் என பதிவிட்டுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools