Tamilசெய்திகள்

கீவ் புறநகர் பகுதிகள் ரஷ்ய படையின் கடுப்பாட்டுக்குள் வந்தது

 

உக்ரைன் மீது ரஷியா படைகள் நடத்தி வரும் தாக்குதல் இன்று 29-வது நாளை எட்டியுள்ளது. ஒரு மாதமாக தொடர் தாக்குதலை சந்தித்து வரும் உக்ரைனின் நகரங்கள் சின்னாபின்னமாகி உள்ளன. இதனால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கீவ் புறநகர் பகுதிகளை ரஷிய படைகள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன. அங்கிருந்து கீவ் நகருக்குள் நுழைய முயன்ற அவர்களை உக்ரைன் ராணுவத்தினர் தடுத்து வருகின்றன. மேலும் ரஷிய படைகளை பின்வாங்க செய்ய வைத்தனர். இதனால் கீவ் நகரில் சில நாட்களாக ஏவுகணை மற்றும் வான்வழி தாக்குதலை ரஷியா அதிகப்படுத்தியது.

ரஷிய ராணுவம் தனது தாக்குதலை இடைவிடாமல் நடத்திக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக தலைநகர் கீவ்வை பிடிக்க ரஷிய படைகள் தீவிரமாக உள்ளன. ஆனால் அவர்களுக்கு உக்ரைன் ராணுவ வீரர்கள் கடும் சவால் அளித்து வருகிறார்கள்.

ஆனாலும் தலைநகருக்குள் ரஷிய ராணுவத்தால் நுழைய முடியவில்லை. இதற்கிடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்து வரும் கீவ் புறநகர் பகுதியில் உள்ள மகாரிவ்வை ரஷியப் படையிடம் இருந்து உக்ரைன் மீட்டது. மேலும் மற்ற பகுதிகளை மீட்கவும் உக்ரைன் ராணுவம் கடுமையாக சண்டையிட்டு வருகிறது.

இதையடுத்து கீவ் நகரில் ரஷியப் படைகள் தனது வான் தாக்குதலை மீண்டும் கடுமையாக்கி உள்ளது. அங்கு தொடர்ந்து குண்டுகள் வீசப்பட்டன. புறநகர் பகுதிகளில் இரு தரப்புக்கும் இடையே சண்டை தீவிரமடைந்து உள்ளது.

ரஷியாவின் தாக்குதலில் கீவ் நகரில் 264 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அந்த நகர மேயர் விட்டலி கிளிட்ச்சோ தெரிவித்தார்.

கீவ் நகரில் இருந்து 15 முதல் 20 கிலோ மீட்டர் தொலைவில் பதுங்கு குழிகளை ரஷிய படைகள் அமைத்துள்ளனர் என்று அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அவர் கூறும்போது, “கிவ் நகரை ரஷியா படையால் முன்னேற முடியவில்லை. கீவ்வின் கிழக்கு பகுதியில் ரஷிய படைகள் பின்வாங்கி உள்ளன. கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதியில் 30 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தன. தற்போது 55 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரஷிய படைகள் சென்றுவிட்டன. ரஷிய படைகள் தங்களை பாதுகாத்து கொள்ள கிவ் புறநகர் பகுதிகளில் பதுங்கு குழிகளை அமைத்து உள்ளனர்” என்றார்.

உக்ரைன் ராணுவத்தினர் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருவதால் ரஷியா, தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. உக்ரைனில் அனைத்து நகரங்களிலும் மீண்டும் கடுமையான தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வருகிறது.

கார்கிவ், மரியுபோல், மெலடோபோல் உள்ளிட்ட நகரங்களில் தொடர்ந்து தாக்குதலை நடத்துகிறது. பெரும்பாலான நகரங்களில் கட்டிடங்கள், உள் கட்டமைப்புகள் முற்றிலும் சேதமடைந்துள்ள போதிலும் உக்ரைன் ராணுவத்தினரின் செயல்பாட்டை முடக்க ஏவுகணை தாக்குதல் தொடர்கிறது.

உருக்குலைந்து காணப்படும் மரியுபோல் நகரில் இன்னும் 1 லட்சம் மக்கள் சிக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நகருககுள் நுழைந்துள்ள ரஷிய வீரர்கள் முக்கிய பகுதிகளில் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர்.

அதே போல் மெலடோபோல் நகரில் உள்ள விமான படை தளத்தில் ரஷியாவின் ராணுவ தளம் அமைக்கப்பட்டுள்ளது. உக்ரைன் ராணுவத்தினர் சில பகுதிகளை மீட்டுள்ளதால் ரஷியப் படைகள், அனைத்து நகரங்களிலும் தாக்குதலை அதிகப்படுத்தி உள்ளது.