கிளாம்பாக்கம் பஸ் நிலையம் விரைவில் திறக்கப்படும் – அமைச்சர் சேகர் பாபு தகவல்

சென்னை திரு.வி.க.நகர் ஸ்டீபன்சன் சாலையில் ரூ.66.83 கோடியில் கட்டப்பட்டுள்ள மேம்பால  பணிகளை இந்து சமயம் மற்றும் அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தாயகம் கவி எம்.எல்.ஏ., மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், இணை கமிஷனர் (பணிகள்) சமீரன் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-

கிளாம்பாக்கம் பஸ் நிலையம் சுமார் ரூ.400 கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசல், மழை காலங்களில் தண்ணீர் தேக்கம், பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் ஆகியவை திட்டமிடப்படாமல் இந்த பஸ் நிலையம்  வடிவமைக்கப்பட்டு இருந்தது.

தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு இந்த பஸ் நிலையத்தில் பல்வேறு கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. பஸ் நிலையம் திறக்கப்பட்டவுடன் ஏற்படுகின்ற போக்குவரத்து நெரிசல் ஆகியவற் றை கட்டுப்படுத்துவதற்காக தற்போது புதிதாக கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தையும், அயனஞ்சேரியையும் இணைக்கின்ற வகையில் 1.20 கிலோ மீட்டர் நீளத்துக்கு ஒரு சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்கு செல்லும் வண்டலூர் சாலையில் போக்குவரத்து நெரிசல்  ஏற்படும்போது, மாற்றுப்பாதையாக 6 கிலோ மீட்டர் அளவுக்கு சாலை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவைகள் இல்லாமல் சமீபத்தில் பெய்த சிறு மழைக்குகூட பெருமளவு தண்ணீர் தேங்கிநின்ற காரணத்தால் சுமார் ரூ.13 கோடியில் புதிதாக மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் இந்த மாத இறுதிக்குள் தொடங்கப்பட உள்ளது.

கிளாம்பாக்கத்தில் ரூ.12 கோடியில் பூங்கா அமைக்கும் பணிகள் ஏற்கனவே தொடங்கி  வைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. மேலும் ஒரு புதிய பூங்கா சுமார் ரூ.6 கோடியில் ஏற்படுத்தப்பட உள்ளது. கிளாம்பாக்கத்தில் போலீஸ் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு, அதற்குண்டான கட்டுமான பணிகளும் தொடங்கப்பட உள்ளது.

நாள்தோறும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்வார்கள் என கணக்கிடப்பட்டு உள்ளதால் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் முதலுதவிக்காக ஒரு மருத்துவ மையம் ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. பஸ் நிலையம் திறப்பிற்கு பிறகு  எந்தவகையிலும் மக்களுக்கு அசவுகரியம் ஏற்படக்கூடாது என்பதற்காக திட்டமிடப்பட்டு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆம்னி பஸ் நிலையத்துக்கு என்று தனியாக ஒரு இடம் தேர்வு செய்யப்பட்டு, கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் ரூ.30 கோடியில் அமைப்பதற்கான பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது. பஸ் நிலையத்தை ஒட்டி பல்வேறு பணிகள் போர்க்கால  அடிப்படையில் சுமார் ரூ.70 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பஸ்நிலையத்தில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தருதல், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் போன்ற அனைத்தையும் நிறைவேற்றி, விரைவில் இந்த பஸ் நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து  வைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news