‘கில்லி’ பட பேனரை கிழித்த அஜித் ரசிகர் மன்னிப்பு கேட்டார்

சமீப காலமாக திரையரங்குகளில் பிரபல நடிகர்களின் படங்கள் ‘ரீ ரிலீஸ்’ ஆகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் நடிகர் விஜய்-திரிஷா நடிப்பில் 2004-ம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் ‘கில்லி’. இந்த படமானது தமிழக தியேட்டர்களில் ஏப்ரல் 27ம் தேதி வெளியாகி பிரம்மாண்டமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இதையடுத்து 23 ஆண்டுகளுக்கு பின் ‘தீனா’ படம் டிஜிட்டல் முறையில் நேற்று அஜித்குமார் பிறந்த நாளில் ‘ரீ ரிலீஸ்’ செய்யப்பட்டது.

இந்நிலையில் சென்னை காசி தியேட்டரில் தீனா படத்தின் ரீ ரிலீஸை பேனர் வைத்து கொண்டாடிய அஜித் ரசிகர்கள், ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினார்கள். அஜித் ரசிகர் ஒருவர் அதே தியேட்டரில் வைக்கப்பட்டு இருந்த கில்லி படத்தின் பேனரை கிழித்து இருக்கிறார். அந்த வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கில்லி பட பேனரைக் கிழித்த அஜித் ரசிகர் எபினேஷ் என்பவரை போலீஸ் கைது செய்தனர். பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல், ஆபாசமாகப் பேசுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் எம்.ஜி.ஆர்.நகர் போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் தியேட்டரில் பேனரை கிழித்த நபர் மன்னிப்பு கேட்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அதில் எபினேஷ் கூறியிருப்பதாது,

காசி திரையரங்கில் தீனா படம் பார்ப்பதற்காக சென்றிருந்தேன். உற்சாகத்தில் நண்பர்களுடன் இருந்த உற்சாகத்தின் மகிழ்ச்சியில் உணர்ச்சி வசப்பட்டு எனது வண்டி சாவியை கொண்டு கில்லி பேனர் கிழித்துவிட்டேன். அதற்காக நான் அண்ணன் விஜய் அவர்களிடமும் தமிழக வெற்றிக் கழக நண்பர்களிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். மேலும் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடமாட்டேன் என்று கூறி தலைவணங்கி மன்னிப்புக் கொண்டுக் கொள்கிறேன்.

என்று கூறியுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools