Tamilசெய்திகள்

கிருஷ்ண ஜெயந்தி விழா – குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து

நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. மதுராவில் உள்ள கிருஷ்ணர் கோவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பலவேறு நிகழ்ச்சிகளுக்கும் அங்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

இந்த மங்கலகரமான தருணத்தில் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வசிக்கும் அனைத்து இந்திய குடிமக்களுக்கும் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கிருஷ்ண பகவானின் வாழ்க்கை, போதனைகளும் நல்வாழ்வு மற்றும் நல்லொழுக்கத்தை உள்ளடக்கியது. அவர் சுயநலமில்லாத கடமை குறித்த கருத்தை பரப்பினார். தர்ம வழியின் மூலம் இறுதி நிலையை அடைவது குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தினார். இந்த பண்டிகை நம் எண்ணம், வார்த்தைகள் மற்றும் செயல்பாடு நல்லொழுக்க பாதையில் செல்ல நம்மை ஊக்குவிக்கட்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், பகவான் கிருஷ்ணரின் பிறப்பைக் குறிக்கும் ஜென்மாஷ்டமி, பக்தர்களுக்கு ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்தது. அதர்மத்தை அழித்து தர்தமத்தை நிலைநாட்டும் நம்பிக்கையை இது உறுதி செய்கிறது. கிருஷ்ணர் தெய்வீக அன்பு, உயர்ந்த அழகு மற்றும் நித்திய ஆனந்தம் ஆகியவற்றின் உருவகம். பகவத் கீதையில் அவரது காலத்தால் அழியாத போதனைகள் மனிதகுலத்திற்கு ஒரு சிறந்த உத்வேகத்தை அளித்துள்ளன. நமது வாழ்க்கையில் இது அமைதி, நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சியை கொண்டு வரட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.