கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:- கிருஷ்ண ஜெயந்தி நன்னாளில், தமிழ்நாடு மக்களுக்கு எனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். பகவான் கிருஷ்ணர், பல்வேறு அவதாரங்களாலும், வாழ்க்கை நிலைகளாலும், அன்பு, இரக்கம், நீதி மற்றும் கடமைகள் ஆகியவற்றின் பெருமதிப்பை நமக்கு கற்றுக் கொடுத்தார். உலக நன்மைக்காக, அடுத்த 25 ஆண்டுகளில் இந்திய நாட்டை ஒரு முழு வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுகின்ற பணியில் நம் நாடு அடியெடுத்து வைத்திருக்கும் இந்தப் பொற்காலத்தில், அறவாழ்வுக்கான ஒரு வழியாக, முழுமையாகவும், மிகுந்த அர்ப்பணிப்புடனும், ஆர்வத்துடனும் நமது கடமையை மேற்கொள்ள வேண்டும் என்கிற அவரது செய்தி, இன்று நம் அனைவருக்கும் மிகவும் பொருத்தமானதாக உள்ளது.
இந்த நன்னாளில், உலகின் வழிகாட்டியாகப் பரிணமிக்கவுள்ள நம் தேசத்தின் விழுமிய லட்சியத்தை நிறைவேற்றுவதற்கு, நம்மால் இயன்ற அனைத்தையும் செய்வதற்கு, நாம் அனைவரும் நம்மை அர்ப்பணிப்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
பகவான் கிருஷ்ணர், அன்பு, இரக்கம், நீதி மற்றும் கடமை ஆகியவற்றின் பெருமதிப்பை நமக்கு கற்றுக் கொடுத்தார்.தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பணிகளைச் செய்வதுதான் நமது கடமை. அதன் முடிவுகளை இறைவனிடத்தில் விட்டுவிட வேண்டும் என்ற தத்துவத்தை போதித்தவர் ஸ்ரீகிருஷ்ண பகவான்.
கிருஷ்ணரின் போதனைகள் பல தலைமுறைகளைக் தாண்டி இன்றும் பொருந்துவதாக இருக்கிறது. நாம் நம்முடைய கடமையை நேர்மையாகவும், அர்ப்பணிப்போடும், விருப்பு-வெறுப்பு இல்லாமலும் செய்வதற்கு நமக்கு வழிகாட்டி வருகிறது. பகவான் ஶ்ரீகிருஷ்ணர் நமக்கு காட்டிய உண்மை, நேர்மை ஆகிய பாதைகளை பின்பற்றி சமூகத்திற்கு நாம் தன்னலமற்ற சேவை செய்ய வேண்டும். இந்த இனிய நாளில் அனைவரது வாழ்விலும் அன்பும், அமைதியும், சகோதரத்துவமும், வளமும், ஒற்றுமையும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.