Tamilசெய்திகள்

கிருஷ்ணா நதிக்கரையில் இருக்கும் சந்திரபாபு நாயுடுவின் பங்களாவை இடிக்க நோட்டீஸ்

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கிருஷ்ணா நதிக்கரையில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு சொந்தமான பரந்து விரிந்த பங்களா உள்ளது. பங்களாவை அகற்றுவதற்காக ஆந்திர அரசு நோட்டீஸ் அனுப்பியது. மண்டல மேம்பாட்டு ஆணையம், பங்களா சுவரில் நோட்டீசை ஒட்டியது.

பங்களாவை ஒட்டி கட்டப்பட்ட பிரஜா வேதிகா என்ற மாநாட்டு அரங்கை அதிகாரிகள் இடிக்கத் தொடங்கியுள்ளனர். சந்திரபாபு நாயுடு தங்கியிருந்த பங்களா, கிருஷ்ணா நதிக்கரையில் 6 ஏக்கர் நிலப்பரப்பில் “எந்தவித சட்டபூர்வ அனுமதியும் இல்லாமல், விதிகள் மற்றும் விதிமுறைகளை முற்றிலும் மீறும் வகையில் கட்டப்பட்டது” என்று நோட்டீசில் கூறியுள்ளது.

கான்கிரீட் கட்டமைப்பைத் தவிர, ஆற்றின் 100 மீட்டருக்குள் நீச்சல் குளம் மற்றும் ஹெலிபேட் ஆகியவை கட்டப்பட்டுள்ளன. மேலும், 10 தற்காலிக கொட்டகைகள் ஆணையத்தின் அனுமதியின்றி எழுப்பப்பட்டுள்ளன. இந்த கட்டமைப்புகள் முழுமையாக அகற்றப்பட வேண்டும்,” என்று தெரிவித்துள்ளனர்.

நோட்டீசின் நகல், கட்டிடம் அமைந்துள்ள உண்டவல்லி ஊராட்சி செயலர் மற்றும் குண்டூர் மாவட்ட பஞ்சாயத்து அலுவலரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. அல்லா ராமகிருஷ்ண ரெட்டி புகார் அளித்தார்.

அதில் அமராவதி தலைநகர் மாஸ்டர் பிளான் மற்றும் அமராவதி உள்வட்ட சாலையை சீரமைத்ததில் முறைகேடு நடந்ததாக கூறியுள்ளார். அதன் அடிப்படையில் கிரிமினல் நம்பிக்கை மீறல், ஏமாற்றுதல் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.