X

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிரனைட் கொள்ளை பற்றி விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும் – டாக்டர்.அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சட்டவிரோத கிரானைட் மற்றும் கருங்கல் குவாரிகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக, அவர்களுக்கு மாவட்ட நிர்வாகமும், புவியியல் மற்றும் சுரங்கத்துறையும் சலுகை காட்டுவதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

கனிமக் கொள்ளையை தடுக்க வேண்டிய தமிழக அரசுத் துறைகள் அதற்கு துணை போவது கண்டிக்கத்தக்கது. இயற்கை வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். கனிமவளக் கொள்ளையை அனுமதிக்கவே கூடாது என்று உச்சநீதிமன்றம் பலமுறை கூறியிருக்கிறது.

ஆனால், அதை சற்றும் மதிக்காமல் கிரானைட் கொள்ளை மற்றும் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவாக மாவட்ட நிர்வாகமும், கனிமவளத்துறையும் செயல்படுவது மன்னிக்க முடியாத குற்றம் ஆகும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் கிரானைட் கொள்ளை மற்றும் அதற்கு ஆதரவாக செயல்படும் அரசுத்துறைகள் குறித்து விசாரணை நடத்தினால் அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளியாகும்.

எனவே, கிருஷ்ணகிரி மாவட்ட கிரானைட் கொள்ளை பற்றி உயர்நிலை விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும். அதுவரை கிரானைட் குவாரிகளை மூட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.