X

கிரிப்டோகரன்சி மூலம் ரூ.700 கோடி மோசடி – கணவன், மனைவி கைது

ஜல்னா மாவட்டத்தில் கிரி காரத் மற்றும் அவரது மனைவி தீப்தி கார்த் ஆகியோர் கிரிப்டோகரன்சி முதலீட்டை ஈர்த்து வந்தனர். இவர்கள் ஜி.டி.சி. கிரிப்டோவில் முதலீடு செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் என உறுதி அளித்தனர். இதை நம்பி பலர் முதலீடு செய்தனர்.

இந்த நிலையில் இவர்களிடம் முதலீடு செய்து நஷ்டமடைந்த நபர் ஒருவர் போலீசில் புகார் அளித்தார். இதேபோல மேலும் பலர் இந்த கிரிப்டோவில் முதலீடு செய்து ஏமாந்து இருக்கலாம் என உணர்ந்த போலீசார், அப்படி பணத்தை இழந்தவர்கள் புகார் அளிக்குமாறு பொதுஅறிவிப்பை வெளியிட்டனர்.

இதன்மூலம் ஒருநாளில் மாவட்டம் முழுவதும் இருந்து 101 பேர் போலீசாரை அணுகி புகார் அளித்துள்ளனர். சுமார் 10 ஆயிரம் முதலீட்டாளர்கள் ரூ.700 கோடி வரை இந்த மோசடியில் இழந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். காரத் தம்பதியின் மீதான இந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளது. இதன்மூலம் அவர்களின் வங்கி கணக்குகளை முடக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் கிரண் காரத் போலீசில் அளித்த புகாரின் மூலம் இந்த வழக்கில் மற்றொரு பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இவர் தனது புகாரில் “தனது கிரிப்டோ கரன்சி திட்டத்தில் சுமார் ரூ.10 கோடி முதலீடு செய்த முன்னாள் கிரிக்கெட் வீரர் விஜய் ஜோல் மற்றும் 20 பேர் தன்னை 4 நாட்கள் பிணை கைதியாக பிடித்து வைத்திருந்ததாகவும், தனது சில சொத்துகள் மற்றும் நிலங்களை விஜய் ஜோல் பெயரில் மாற்ற கையெழுத்திட கட்டாயப்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் விஜய் ஜோல் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அணியை சேர்ந்த முன்னாள் மந்திரி அர்ஜுன் கோட்கரின் மருமகன் ஆவார். இதுகுறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. கைலாஷ் கோரண்டியல் கூறுகையில், ‘அர்ஜுன் கோட்கரும் அவரது ஆட்களும் காரத்தை பிணை கைதியாக பிடித்து வைத்து துன்புறுத்தியதன் மூலமாக சட்டத்தை கையில் எடுத்துள்ளனர்’ என குற்றம் சாட்டினார்.