டிஎஸ் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனம், நியூ குளோபல் புரொடியூஸ் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனத்துடன் உரம் தயாரிப்பு மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பாக ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த ஒப்பந்தத்தின்படி, நியூ குளோபல் புரோடியூஸ் நிறுவனம் 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள உரத்தை தயாரித்து டிஎஸ் நிறுவனத்திற்கு டெலிவரி செய்தது. ஆனால், உரம் எதிர்பார்த்த அளவில் விற்பனையாகவில்லை.
இதற்கு நியூ குளோபல் நிறுவனம் சரியாக சந்தைப்படுத்தாதே காரணம் என டிஎஸ் எண்டர்பிரைசஸ் குற்றம்சாட்டியது.
இதனால் நியூ குளோபல் நிறுவனம் மீதமிருந்த உரங்களை திரும்பப் பெற்றது. அதற்கு பதிலாக 30 லட்சம் ரூபாய் காசோலையை வழங்கியது. ஆனால், காசோலையை வங்கியில் டெபாசிட் செய்தபோது, அது செல்லுபடியாகவில்லை. இதுதொடர்பாக, நியூ குளோபல் நிறுவனத்திற்கு டிஎஸ் எண்டர்பிரைசர்ஸ் நிறுவனம் சட்டப்பூர்வமாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால், அந்த நிறுவனம் எந்த பதிலும் அளிக்கவில்லை.
இந்நிலையில் டிஎஸ் எண்டர்பிரைசஸ் நிறுவன உரிமையாளர் நீரஜ் குமார் நிராலா, நியூ குளோபல் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கிரிக்கெட் வீரர் டோனி, தலைமை செயல் அதிகாரி ராஜேஷ் ஆர்யா உள்பட 8 பேரின் பெயர் இடம்பெற்றுள்ளது. முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி இந்த நியூ குளோபல் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்திருந்ததால் இவ்வழக்கில் அவரின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம், மேல் விசாரணையை மஜிஸ்திரேட் அஜய்குமார் மிஸ்ராவுக்கு அனுப்பியது. அவர் இதன் விசாரணையை வரும் ஜூன் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.