கிரிக்கெட் வாரியத்தின் அறுவுறுத்தலை மீறிய ரிஷப் பண்ட்
விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
சவுத்தம்டனில் கடந்த மாதம் 18 முதல் 23-ந் தேதி வரை நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடிய இந்திய அணி நியூசிலாந்திடம் தோற்றது.
அடுத்து இங்கிலாந்துடன் 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடுகிறது. முதல் டெஸ்ட் அடுத்த மாதம் 4-ந் தேதி தொடங்கியது.
உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப்போட்டி முடிந்ததும் இந்திய அணியினருக்கு 20 நாட்கள் ஓய்வு வழங்கப்பட்டது.
இதையடுத்து வீரர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று பொழுதை கழித்தனர். சில வீரர்கள் விம்பிள்டன் டென்னிஸ் மற்றும் யூரோ கால்பந்து போட்டியை நேரில் சென்று ரசித்தனர். இதற்கிடையே இந்திய அணியின் விக்கெட் கீப்பரும் அதிரடி பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்டுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
அவர் கடந்த 8-ந் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனது நண்பர் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார் என்று தகவல் வெளியாகி இருந்தது.
ரிஷப் பண்ட், சமீபத்தில் யூரோ கால்பந்து போட்டியில் இங்கிலாந்து-ஜெர்மனி ஆட்டத்தை மைதானத்துக்கு நேரில் சென்று பார்த்தார். அந்த புகைப்படத்தை சமூக வலைதளத்திலும் பதிவிட்டு இருந்தார். அதில் அவர் முகக்கவசம் அணியாமல் இருந்தார்.
மேலும் அவர் பல இடங்களுக்கு நண்பர்களுடன் சென்று சுற்றியதாக தெரிகிறது.
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய்ஷா, இங்கிலாந்தில் உள்ள இந்திய அணியினருக்கு இ-மெயிலில் ஒரு கருத்து அனுப்பி உள்ளார்.
இங்கிலாந்தில் டெல்டா வகை வைரசால் கொரோனா தொற்று அதிகரித்து வருவதையொட்டி இந்த எச்சரிக்கையை அனுப்பியுள்ளார்.
ஜெய்ஷா அனுப்பிய இ-மெயிலில் வீரர்கள் நெரிசலான மற்றும் கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். தடுப்பூசி பாதுகாப்பை மட்டுமே வழங்கும். வைரசுக்கு எதிராக முழு நோய் எதிர்ப்பு சக்தி கிடையாது என்று தெரிவித்துள்ளார்.
ஜெய்ஷாவின் இந்த கடிதம் விம்பிள்டன் டென்னிஸ் மற்றும் யூரோ, சாம்பியன்ஷிப் போட்டியை நேரில் பார்க்க செல்வதை தவிர்க்க வேண்டும் என்று குறிப்பிடும் வகையில் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.
ஆனால் கிரிக்கெட் வாரியத்தின் அறிவுறுத்தலை மீறி ரிஷப்பண்ட் யூரோ கால்பந்து போட்டியை பார்க்க நேரில் சென்றதாக தெரிகிறது.
இதற்கிடையே இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சவுரவ் கங்குலி கூறும்போது, இங்கிலாந்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு போட்டிகளை பார்க்க ரசிகர்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்திய கிரிக்கெட் வீரர்கள் விடுமுறையில் இருந்ததால் அவர் அங்கு சென்றுள்ளார். அனைத்து நேரத்திலும் முகக்கவசம் அணிந்து கொண்டு இருப்பது என்பது உடல் ரீதியாக சாத்தியமில்லாதது என்றார்.