வேலூர் வி.ஐ.டி.யில் நடைபெற்ற விழாவில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் கலந்து கொண்டார். விழாவில் ஹர்பஜன் சிங் பேசியதாவது:-
இந்தியாவில் பஞ்சாப் தவிர்த்து அதிக ரசிகர்களை கொண்ட மாநிலமாக தமிழகம் உள்ளது. எனது 17-வது வயதில் கிரிக்கெட் பயணத்தை தொடங்கினேன். முதல் ‘ஹாட்ரிக்’ விக்கெட்டுகளை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எடுத்தது எனது சாதனையாக இன்றும் உள்ளது.
வாழ்வில் நாம் எண்ணிய லட்சியத்தை அடைய நாம் தொடர்ந்து கடின முயற்சியில் ஈடுபட வேண்டும். எக்காரணத்தை கொண்டும் நாம் முயற்சியை கைவிடக் கூடாது. இருசக்கர வாகன ஓட்டுனரும் பின்னால் உட்கார்ந்து வருபவரும் கட்டாயமாக தலைக்கவசம் அணிய வேண்டும். மேலும் நாம் வாகனத்தை மது அருந்திவிட்டு ஓட்டக் கூடாது.
தொடர்ந்து கிரிக்கெட்டில் பயணம் செய்த நான் இப்போது முதல் முறையாக படத்தில் நடிக்கிறேன். அதுவும் தமிழில் எனது முதல் படம் என்பது பெருமையாக உள்ளது. கிரிக்கெட்டில் கொடுத்த ஆதரவை எனது திரையுலக பயணத்திலும் நீங்கள் அளிக்க வேண்டும்.
இந்த ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் டோனி விளையாடுவார். கோப்பையை வெல்வோம் என நம்பிக்கை உள்ளது. மஞ்சள் ஜெர்சி சி.எஸ்.கே. கிரிக்கெட் அணிக்கு அனைவரும் ஆதரவு அளியுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியது மற்றும் உலக கோப்பையை வென்ற தருணங்களை மறக்க முடியாது என மாணவர்களின் கேள்வி களுக்கும் பதிலளித்தார்.