விஜய் சேதுபதி நடித்து முடித்துள்ள மாஸ்டர், ‘க/பெ ரணசிங்கம்’, ‘மாமனிதன்’, ‘கடைசி விவசாயி’ உள்ளிட்ட படங்களின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது ‘லாபம்’, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’, ‘துக்ளக் தர்பார்’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ உள்ளிட்ட படங்கள் தயாரிப்பில் இருக்கின்றன.
சில மாதங்களுக்கு முன்பு இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாவதாக அறிவிக்கப்பட்டது. எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்க, அதில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாகவும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டது.
கிரிக்கெட் ரசிகர்கள் உட்பட பலரும் இதற்கு வரவேற்பு தெரிவித்த நிலையில், ‘இலங்கை வீரரின் கதையில் தமிழரான விஜய் சேதுபதி நடிப்பதா?’ என்று சிலர் விமர்சித்தனர். இதனால், இந்தப் படம் தொடங்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் தான் நடித்து வரும் படங்களை முடித்துவிட்டு, முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் விஜய் சேதுபதி.
விஜய் சேதுபதி உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. முத்தையா முரளிதரன் 800 விக்கெட்களை வீழ்த்தியவர் என்பதால், படத்துக்கு ‘800’ என்றே தலைப்பிடவும் முடிவு செய்துள்ளனர்.