கிரிக்கெட்டை மையமாக வைத்து பா.இரஞ்சித் தயாரிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது
‘அட்டகத்தி’, ‘மெட்ராஸ்’ திரைப்படங்கள் மூலம் கவனம் ஈர்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ‘கபாலி’, ‘காலா’ ஆகிய படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக உயர்ந்தவர் இயக்குனர் பா.இரஞ்சித். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது காளிதாஸ் ஜெயராம், அசோக் செல்வன், துஷரா விஜயன் ஆகியோர் நடிப்பில் ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்ற படத்தை ரஞ்சித் இயக்கி முடித்துள்ளார். அதைத் தொடர்ந்து நடிகர் விக்ரம் நடிக்கும் ‘சியான் 61’ படத்தை இயக்குகிறார்.
இதனிடையே பரியேறும் பெருமாள், குண்டு, ரைட்டர், குதிரைவால், சார்பட்டா பரம்பரை, சேத்துமான் உள்ளிட்ட படங்களை நீலம் புரொடக்சன்ஸ் சார்பாக இயக்குனர் பா.இரஞ்சித் தயாரித்திருந்தார். தற்போது பா.இரஞ்சித் தயாரிப்பில் கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்ட புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இப்படத்தை பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் லெமன் லீப் கிரியேசன்ஸ் கணேசமூர்த்தி இணைந்து தயாரிக்கின்றனர்.
இந்த படத்தில் அசோக்செல்வன், சாந்தனு பாக்யராஜ், ப்ரித்வி பாண்டியராஜன், கீர்த்திபாண்டியன், திவ்யா துரைசாமி, உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை இயக்குனர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜெய்குமார் இயக்குகிறார். இப்படத்திற்கு ஓ2, தம்மம் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய தமிழழகன் ஒளிப்பதிவு செய்ய கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இப்படத்தின் திரைக்கதை வசனத்தை தமிழ்பிரபா மற்றும் ஜெய்குமார் எழுதுகின்றனர். மேலும் இப்படம் குறித்த அடுத்தடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.