X

கிரிக்கெட்டை மறந்துவிடவில்லை – தவான்

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், சையத் முஸ்தாக் அலி கோப்பை போட்டியின் போது இடது கால் முட்டியில் காயமடைந்தார். இதற்காக அவருக்கு 25 தையல்கள் போடப்பட்டன. காயத்தில் இருந்து குணமடைந்து விட்ட அவர் இலங்கைக்கு எதிரான 20 ஓவர் தொடர் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான இந்திய அணிக்கு திரும்பியுள்ளார்.

அதற்கு முன்பாக ரஞ்சி கிரிக்கெட்டில் ஐதராபாத்-டெல்லி அணிகள் இடையே டெல்லியில் இன்று தொடங்கும் ஆட்டத்தில் டெல்லி அணியின் கேப்டனாக அவர் களம் இறங்குகிறார். இதையொட்டி 34 வயதான தவான் நிருபர்களிடம் கூறியதாவது:-

இது எனக்கு புதிய தொடக்கம். முதலில் விரலில் பந்து தாக்கி காயமடைந்தேன். அதன் பிறகு கழுத்து, கண்ணில், அதன் தொடர்ச்சியாக கால் முட்டியில் காயம் ஏற்பட்டது. விளையாட்டில் காயம் அடைவது சகஜம். அதை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். சிறிது காலம் ஓய்வில் இருந்து விட்டு மீண்டும் விளையாடுவது என்னை பாதிக்கவில்லை. எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்பதை நான் மறக்கவில்லை. எனது திறமை நிரந்தரமானது. மீண்டும் ரன்கள் குவிப்பேன்.

எனக்கு பதிலாக இந்திய அணியில் இடம் பிடித்த லோகேஷ் ராகுல் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சிறப்பாக விளையாடி ரன் குவித்தது மகிழ்ச்சியே. அவர் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார். என்னை பொறுத்தவரை நான் களம் இறங்கி எனது திறமையை வெளிப்படுத்துவேன். மூன்று வடிவிலான போட்டிகளிலும் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பதே எனது லட்சியம். அதற்காக உழைக்கிறேன்.

சவால்களை எப்போதும் மகிழ்ச்சியோடு எதிர்கொள்கிறேன். போட்டிகளில் சோபிக்காவிட்டாலும் அதை கண்டு நான் தளர்ந்து விடுவதில்லை. அதில் இருந்து பாடம் கற்றுக் கொள்கிறேன். இந்த ரஞ்சி போட்டியில் என்னை ஒரு பெரிய வீரராக நினைத்துக் கொள்ளவில்லை. அணியினருடன் இயல்பாக பழகுகிறேன். எனது அனுபவத்தை இளம் வீரர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இவ்வாறு தவான் கூறினார்.

இந்த ரஞ்சி போட்டியில் தவானுடன் சேர்ந்து அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மாவும் டெல்லி அணிக்காக ஆடுகிறார்.

இதே போல் சூரத்தில் இன்று தொடங்கும் கேரளாவுக்கு எதிரான ரஞ்சி போட்டியில் குஜராத் அணிக்காக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கால் பதிக்கிறார். முதுகுவலி பிரச்சினையால் அவதிப்பட்ட பும்ரா தனது உடல்தகுதியை நிரூபிக்க இந்த போட்டியில் களம் காணுகிறார்.

Tags: sports news