திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் 25-ம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சி சென்னை எம்.ஆர்.சி. நகரில் நேற்று நடந்தது. விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனுமான டோனி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன துணை சேர்மனும், நிர்வாக இயக்குனருமான என்.சீனிவாசன், திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் ஆர்.என்.பாபா ஆகியோர் விழாவில் பங்கேற்றனர்.
தமிழ்நாடு விளையாட்டு பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.3 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கு டோனி இதை வழங்கினார்.
மாவட்ட கிரிக்கெட் சங்க விழாவில் நான் பங்கேற்பது இதுதான் முதல் முறையாகும். சென்னையில் இருந்தபடி எனது ரஞ்சி மாவட்ட கிரிக்கெட் சங்கத்திற்கு நன்றி செலுத்துகிறேன். சென்னையை எனது இன்னொரு வீடாக கருதுகிறேன்.
பள்ளி அளவிலான போட்டிகளில் இருந்தே நான் கிரிக்கெட்டை கற்றுக்கொண்டேன். மாவட்ட அளவிலான போட்டிகளின் மூலம் பல வீரர்கள் உருவாகியுள்ளனர். கிரிக்கெட் வீரர்கள் மாவட்ட போட்டிகளில் பங்கேற்பது பெருமையானது.
மாவட்ட அளவிலான போட்டியில் சிறப்பாக விளையாடினால் தேசிய அளவிலான போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்கும். திறமையான வீரர்களை உருவாக்குவதில் மாவட்ட கிரிக்கெட் அமைப்புகளுக்கு பொறுப்புகள் அதிகம். கிரிக்கெட்டில் பெண்களின் பங்களிப்பும் அவசியம் இருக்க வேண்டும்.
25-வது ஆண்டை நிறைவு செய்த திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தை வாழ்த்துகிறேன். இந்த சங்கம் அதற்கு மேலும் விழாவை கொண்டாட வேண்டும். ரஞ்சி, ஐ.பி.எல். இந்திய அணிக்கான வீரர்களை இந்த அமைப்பு உருவாக்க வேண்டும்.
இவ்வாறு டோனி பேசினார்.
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன முழுநேர இயக்குனர் ரூபா குருநாத், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன் மற்றும் நிர்வாகிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.