இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்ற டோனி, டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வந்த நிலையில், கடந்த ஆண்டு (2019) ஜூலை மாதம் முடிந்த ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடிய விக்கெட் கீப்பர் டோனி அதன் பிறகு எந்த போட்டியிலும் பங்கேற்கவில்லை.
இதையடுத்து அவர் ஓய்வு பெற வேண்டும், என்று பலர் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால், ஐ.பி.எல். போட்டியின் மூலம் டோனி மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக அந்த போட்டி காலவரையின்றி தள்ளிப்போடப்பட்டு இருப்பதால் டோனியின் மறுபிரவேசம் கேள்விக்குறியாகி இருந்தது.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள டோனி, தனக்கு ஆதரவு அளித்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.