தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடைந்தது. தி.முக. வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அப்போதே கட்சியை பலப்படுத்த அடுத்த கட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எடப்பாடி பழனிசாமி கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தற்போது அ.தி.மு.க.வின் உள்கட்சி தேர்தல் நடைபெற்று புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்று உள்ளனர். இதை தொடர்ந்து கிராமம் கிராமாக சென்று அ.தி.மு.க.வை பலப்படுத்த எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.
தற்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் தங்கி உள்ளார். அவரது பிறந்த நாளையொட்டி கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் இருந்து வரும் அரசியல் கட்சியினர் அவரது வீட்டிற்கு வந்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
வாழ்த்து சொல்ல வரும் முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், முன்னாள் எம்.பி.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
அப்போது சசிகலா பலப்படுத்துவதாக தொடர்ந்து கூறி வருவது, நெல்லை மாவட்டம் முன்னீர் பள்ளம் கல்குவாரி விபத்து , அ.தி.மு.க. மேல்சபை எம்.பி. வேட்பாளர்களாக யாரை அறிவிப்பது, பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வால் போராட்டம் நடத்தி வருபவர்களுக்கு ஆதரவு தெரிவித்தது உள்பட அனைத்து பிரச்சினைகளுக்கும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தி வருகிறார்.
மேலும் 2 ஆண்டுகளில் பாராளுமன்ற தேர்தல் வர உள்ளதால் கட்சியை பலப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஊராட்சி வாரியாக சென்று கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களை சந்திக்கவும் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்தும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வரும் அவர் அதற்கான தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளதாகவும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
பிரதமர் நரேந்திரமோடி வருகிற 26-ந்தேதி சென்னை வருகிறார். அப்போது அவரை சந்தித்து ஆலோசனை நடத்தவும் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். அப்போது தி.மு.க. ஆட்சி தொடர்பான புகார்களை அளிக்க அவர் முடிவு செய்துள்ளார். இதுதொடர்பாகவும் கட்சி நிர்வாகிகளிடம் கருத்து கேட்டு வருகிறார்.