Tamilசெய்திகள்

கிராமங்களில் 4ஜி சேவை வழங்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 1.64 லட்சம் கோடி மதிப்பில் பிஎஸ்என்எல்-ன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன் மூலம் புதிய மூலதனம், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு, பாரத் பிராட்பேண்ட் நிகாம் நிறுவனத்தை பிஎஸ்என்எல் உடன் இணைப்பதன் மூலம் பைபர் நெட்வொர்க்கை அதிகரித்தல் ஆகிய மறுசீரமைப்பு பணிகள் மூலம் பிஎஸ்என்எல் சேவைகள் மேம்படும்.

மேலும் ஊரகப் பகுதிகளில் உள்ள 24,680 கிராமங்களுக்கு 4ஜி மொபைல் சேவை அளிக்கும் வகையில் ரூ.26,316 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் 2ஜி, 3ஜி மொபைல் சேவை வசதி மட்டும் உள்ள 6,279 கிராமங்கள் 4ஜி மொபைல் சேவை வசதி பெற்ற கிராமங்களாக மேம்படுத்தப்படுகிறது.

17 வயதுக்கு உட்பட்டோருக்கான ஃபிஃபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் இப்போட்டி நடத்துவதற்காக அகில இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட உள்ளது. அக்டோபர் மாதம் 11-ந் தேதி தொடங்கி 30-ந் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெறுகின்றன.