X

கிரண்பேடி விளம்பரத்திற்காக செயல்படுகிறார் – முதலமைச்சர் நாராயணசாமி தாக்கு

அமைச்சர் கந்தசாமி தான் வகிக்கும் துறையின் கீழ் உள்ள 15 கோப்புகளுக்கு கவர்னர் அனுமதி அளிக்கக்கோரி கடந்த 10-ந்தேதி இரவு முதல் சட்டசபை வளாகத்தில் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று அவரது போராட்டம் 8-வது நாளாக நீடித்தது.

அமைச்சர் கந்தசாமிக்கு ஆதரவு தெரிவித்தும், கவர்னர் கிரண்பேடியை கண்டித்தும் புதுவை மாநில அனைத்து தலித், பழங்குடி அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் பழைய சட்டக்கல்லூரி அருகில் செஞ்சிசாலையில் நேற்று உண்ணாவிரதம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ. மூர்த்தி தலைமை தாங்கினார். இதில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு பேசியதாவது:-

புதுவையில் கடந்த 4½ ஆண்டுகளாக காங்கிரஸ், தி.மு.க. மற்றும் மதசார்பற்ற கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. எங்கிருந்தோ வந்து புதுவை மக்களை கவர்னர் தொடர்ந்து வஞ்சித்து வருகிறார். கொரோனாவுக்கு முன்பு அவர் ஒவ்வொரு பகுதியாக சைக்கிளில் சென்று வந்தார். கடந்த 10 மாதமாக கவர்னர் மாளிகையை விட்டு அவர் வெளியே வரவில்லை. ஆனால் நாங்கள் மக்களுக்காக தொடர்ந்து செயல்பட்டு கொண்டே இருக்கிறோம். திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். ஆனால் அவர் விளம்பரத்திற்காக செயல்படுகிறார். இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். நகர பகுதியில் போடப்பட்டுள்ள தடுப்பு கட்டைகள் நாளை (இன்று) நடைபெறும் சட்டமன்ற கூட்டத்திற்கு பின் அகற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த போராட்டத்தில் வைத்திலிங்கம் எம்.பி. விஜயவேணி எம்.எல்.ஏ., காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், முன்னாள் அமைச்சர் விசுவநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. நாரா. கலைநாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன், ம.தி.மு.க. மாநில செயலாளர் கபிரியேல் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.