X

கிண்டி கத்திபாரா மேம்பாலத்தின் கீழ் அதிநவீன உணவகங்கள் திறப்பு!

கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் போக்குக்வரத்து நெருக்கடியை குறைப்பதற்காக பிரமாண்ட மேம்பாலம் 2008-ம் ஆண்டு திறக்கப்பட்டது.

ஜி.எஸ்.டி.சாலை (தேசிய நெடுஞ்சாலை 45) உள்வட்ட சாலை, அண்ணாசாலை மற்றும் பூந்தமல்லி சாலை ஆகிய சாலைகளை இணைக்கும் வகையில் கத்திப்பாரா மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

இப்பாலத்தின் அருகே உயர்மட்ட பாதையில் மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைந்துள்ளது. இந்த பாலத்தின் அருகே ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையம் அமைந்துள்ளது.

இந்த நிலையில் கத்திப்பாரா மேம்பாலத்தின் அடியில் உள்ள காலி இடங்களில் ரூ.14 கோடி செலவில் மெட்ரோ ரெயில் பயணிகள், பஸ் பயணிகள், மின்சார ரெயில் பயணிகள் வசதிக்காக பல்வேறு சிறப்பு வசதிகளை அமைக்க மெட்ரோ ரெயில் நிர்வாகம் முடிவு செய்தது.

கத்திப்பாரா மேம்பாலத்தின் அடிப்பகுதியில் 5.85 லட்சம் சதுரஅடி காலி இடத்தில் பொழுது போக்கு பூங்கா, நடைபாதை, திறந்தவெளி கலையரங்கம், உணவகங்கள், கடைகள், கழிப்பிடங்கள், வங்கி ஏ.டி.எம், சிறுவர் விளையாட்டு உபகரணங்கள், மோட்டார் சைக்கிள், கார் நிறுத்துமிடம், புல்தரை அலங்கார விளக்குகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வசதிகள் உருவாக்கப்படுகின்றன.

தாம்பரம், பூந்தமல்லி, கோயம்பேடு, பாரிமுனை, திருவான்மியூர் ஆகிய பகுதிகளுக்கு கத்திப்பாரா சந்திப்பில் இருந்து நேரடி பஸ்களை இயக்கும் வகையில் பஸ்நிலையம் அமைக்கப்படுகிறது.

வருகிற ஆகஸ்டு மாதத்தில் இப்பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட உள்ளது.

கத்திப்பாராவில் பொழுது போக்கு பூங்கா உள்ளிட்ட பல்வேறு வசதிகள் பயன்பாட்டுக்கு வரும்போது ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.