காங்கிரஸ் ஆட்சியின் போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கை ‘மவுன மன்மோகன்சிங்’ என்று கிண்டல் அடித்தனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பிரதமர் மோடியை, மன்மோகன் சிங் விமர்சித்துள்ளார்.
கடந்த ஏப்ரலில் மன்மோகன் சிங் அளித்த பேட்டியின் போது, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் நான் பிரதமராக இருக்கும் போது பல்வேறு விஷயங்களில் முன்கூட்டியே கருத்து கூறாமல் இருந்ததற்காக என்னை மவுன மன்மோகன் சிங் என்று பாஜகவினர் அழைத்தார்கள். இதே பெயரோடு தான் நான் ஆட்சி முழுவதும் வாழ்ந்தேன் என்றார்.
நான் பிரதமராக இருந்தபோது, பத்திரிகையாளர்களை சந்திக்க ஒருநாளும் அச்சப்பட்டதில்லை. நான் வாய் திறக்காத பிரதமர் என்று நினைப்பவர்களுக்கு `சேஞ்சிங் இந்தியா’ என்ற தமது புத்தகம் பதிலளிக்கும் என்று கூறிய அவர், வெளிநாட்டு பயணங்களுக்கு பத்திரிகையாளர்களை அழைத்துச் சென்றதாகவும், திரும்பியவுடன் ஊடகங்களை சந்தித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் 8 வயது சிறுமி பலாத்காரம், உ.பி. உன்னாவ் நகரில் இளம்பெண்ணை பா.ஜனதா எம்எல்ஏ பலாத்காரம் உள்ளிட்ட சம்பவங்கள் குறித்து பேசிய மன்மோகன் சிங், வாய்திறந்து பேசுங்கள் மோடி, எனக்கு நீங்கள் கூறிய அதே அறிவுரைகளைத்தான் நானும் உங்களுக்கு கூறுகிறேன் என்று காட்டமாக கூறினார்.