காஷ்மீர் விவகாரம் குறித்து வெளிநாட்டு தூதர்களுக்கு விளக்கம் அளிக்கும் மத்திய அரசு

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நேற்று ரத்து செய்தது. மேலும் அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்க நடவடிக்கை எடுத்து உள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நடவடிக்கை சர்வதேச அளவிலும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இது தொடர்பாக வெளிநாட்டு தூதர்களுக்கு மத்திய அரசு நேற்று விளக்கம் அளித்தது. இதற்காக ‘பி-5’ எனப்படும் அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ரஷியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் தூதர்கள் மட்டுமின்றி, மேலும் பல்வேறு நாடுகளை சேர்ந்த தூதர்கள், துணைத்தூதர்கள் ஆகியோருக்கு அரசு அழைப்பு விடுத்தது.

இதை ஏற்று டெல்லியில் மத்திய அரசு நடத்திய கூட்டத்தில் மேற்படி நாடுகளின் தூதர்கள் கலந்து கொண்டனர். அதில் அவர்களுக்கு காஷ்மீர் விவகாரம் குறித்து வெளியுறவுத்துறை மூத்த அதிகாரிகள் விளக்கினர். சிறந்த நிர்வாகம், சமூக நீதி மேம்பாடு மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அப்போது அதிகாரிகள் விளக்கினர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools