காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் – நேபாள பிரதமர் கண்டனம்
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நேற்று சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தியதில் 26 சுற்றுலாப்பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் கர்நாடகா, ஒடிசா, குஜராத் மற்றும் மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர்களும் 2 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் உயிரிழந்தனர்.
மேலும் காயம் அடைந்த 13 பேரில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
துப்பாக்கி சூட்டை தொடர்ந்து பஹல்காம் அழகிய புல்வெளி, ரத்தக்கறை படிந்து அலங்கோலமானது. சுற்றுலாத்தலம் வெறிச்சோடியது. நேற்று நடந்த பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதல் 2019-ம் ஆண்டு சி.ஆர்.பி.எப். வீரர்கள் மீது நடந்த புல்வாமா தாக்குதலுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல் என்று தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
நேபாளம் இந்தியாவுடன் உறுதியாக நிற்கிறது மற்றும் எந்தவொரு பயங்கரவாத செயல்களையும் கடுமையாக கண்டிக்கிறது. பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் நேபாள நாட்டை சேர்ந்தவர் என்ற தகவலை சரிபார்த்து வருகிறோம். இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் நேபாளம் வழங்கும் என்று தெரிவித்துள்ளார்.