X

காஷ்மீர் பஞ்சாயத்து தலைவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு – அமித்ஷா உறுதி

காஷ்மீரில், 6 ஆண்டு இடைவெளிக்கு பிறகு கடந்த ஆண்டு பஞ்சாயத்து தேர்தல் நடந்தது. 4 ஆயிரத்து 490 பஞ்சாயத்துகளுக்கு 35 ஆயிரத்து 96 பஞ்சாயத்து தலைவர்களும், உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நிலையில், அங்குள்ள பஞ்சாயத்து தலைவர்கள், உறுப்பினர்கள் அடங்கிய 20 பேர் குழு, நேற்று டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்தது. அப்போது, காஷ்மீரை சேர்ந்த மத்திய மந்திரி ஜிதேந்திர சிங்கும் உடன் இருந்தார்.

இந்த சந்திப்பின்போது, தங்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு அக்குழு கேட்டுக்கொண்டது.

அதற்கு அமித் ஷா, பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ள அனைத்து பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று உறுதி அளித்தார். அவர்களுக்கு ரூ.2 லட்சத்துக்கான காப்பீடு வழங்கப்படும் என்றும் கூறினார். அவர்களின் மதிப்பூதியத்தை ரூ.2,500-ல் இருந்து உயர்த்துவது பற்றி பரிசீலிக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.

மேலும், காஷ்மீரில் ஒவ்வொரு கிராமத்தை சேர்ந்த தலா 5 இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அமித் ஷா கூறினார். 15 முதல் 20 நாட்களில், மொபைல் போன் சேவை சீரமைக்கப்படும் என்று கூறினார்.

நிலைமை சீரடையும்போது, காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார். கிராமங்களுக்கு நேரில் சென்று 370-வது பிரிவு நீக்கத்தால் உண்டாகும் பலன்களை விளக்கிச் சொல்லுமாறு பஞ்சாயத்து தலைவர்களை அமித் ஷா கேட்டுக்கொண்டார்.