காஷ்மீர் நடவடிக்கைக்கு காங்கிரஸ் தலைவர் கரண் சிங் வரவேற்பு
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. எனினும் அந்த கட்சியை சேர்ந்த தலைவர்கள் சிலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கரண் சிங்கும், மத்திய அரசின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்.
காஷ்மீர் மாநிலம் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட காலத்தில் அங்கு மன்னராக இருந்த மகாராஜா ஹரி சிங்கின் மகனான இவர், இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘காஷ்மீர் தொடர்பாக மத்திய அரசு மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகளை முற்றிலும் கண்டிக்க முடியாது. அதில் நிறைய நல்ல விஷயங்களும் உள்ளன. குறிப்பாக லடாக்கை யூனியன் பிரதேசமாக மாற்றியது வரவேற்புக்குரியது. அரசியல் சாசனம் 35 ஏ பிரிவு நீக்கப்பட்டதை ஆதரிக்கிறேன். ஏனெனில் பாலின பாகுபாட்டை முடிவுக்கு கொண்டு வரவேண்டியது அவசியம் ஆகும்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.
அதே நேரம் மாநிலத்தின் முக்கிய அரசியல் கட்சிகளான தேசிய மாநாடு மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவற்றை தேச விரோதமானவை என குறிப்பிடக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டு உள்ளார்.